Asianet News TamilAsianet News Tamil

”அம்மா மினி கிளினிக்” ஒன்னு இல்லவே இல்லை - தடாலடி போட்டு உடைத்த அமைச்சர்

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் தற்போது இல்லை என்றும் செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

Amma Mini Clinic
Author
Chennai, First Published Nov 29, 2021, 10:26 PM IST

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் கடந்தாண்டு அம்மா மினி கிளினிக் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் சுமார் 2000 மினி கிளினிக்கள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.  

Amma Mini Clinic

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்டம் நவப்பட்டி ஊராட்சி பொதுச் சேவை மையத்தில் உள்ள "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று பெயர் மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நவப்பட்டி "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர்ப் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம் என்றும் இந்த பெயர்ப் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதனிடையே இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சேலம் நவல்பட்டு பகுதியில் உள்ள அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. இதற்கு 1842 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும், பெயரளவில் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை. அப்படிச் செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறினார்.

மேலும் அவர், வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் தற்போது சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்குப் பயன் தரும் வகையிலான திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. அம்மா உணவகத்தில் உள்ள பணியாளர்களை வேலையை விட்டு எடுப்பதாகக் கூறும் தகவல் உண்மை இல்லை. இந்த ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சியினர் பார்த்து மிரண்டு விட்டார்கள். அதனால் தான் இப்படி ஆதாரமில்லாத புகார்களைக் கூறி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

அம்மா மினி கிளினிக் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை விட்டிருந்தார். அதில் அவர் மாற்றத்தை தருவோம் என்று கூரிவிட்டு தேர்தல் முடிவுகள் வெளிவந்த இரண்டாவது நாளே முகப்பேர் பகுதியில் அம்மா உணவகம் சூறையாடப்பட்டது.சில நாட்களுக்கு முன் மதுரையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் திடீரென திமுக தலைவர் (கருணாநிதி) படத்தை ஒட்டியது என்ற வரிசையில் இப்போது சேலத்தில் அம்மா மினி கிளினிக் பெயரை மாற்றியது என ஏமாற்றத்தை தரும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது. சேலம் மாவட்டம் நவப்பட்டி ஊராட்சி பொதுச் சேவை மையத்தில் இயங்கும் அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை எடுத்துவிட்டு ‘முதலமைச்சர் மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை வைத்ததோடு அதில் தற்போதைய முதல்வர் மற்றும் மறைந்த திமுக தலைவர் (கருணாநிதி) உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.  பெயர் பலகையை மாற்றியவர்கள் யார் என்பதை ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாவின் திருவுருவப் படத்துடன் கூடிய அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை மீண்டும் அங்கு பொருத்தப்பட வேண்டும். இதில் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்கவும், அம்மா படத்துடன் பெயர்ப்பலகை பொருத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios