தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. தண்ணீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு காலி குடங்களுடன் சென்று, அலைந்து திரிகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரை குடம் தண்ணீர் அல்ல அரை லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த செய்திகள் தவறானவை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது;- தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதை சென்னையில் மட்டும் என்று சுட்டிக்காட்ட முடியாது. அனைத்து பகுதியில் உள்ள ஏரிகள், தூர்வாரப்பட்டு சீரமைக்கப்படுகிறது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய துரித நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

அம்மா குடிநீர் கடைகளில் கிடைப்பதில்லை என புகார் கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு. பெரும்பாலான மக்கள், அம்மா குடிநீரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால், தீர்ந்துவிடுகிறது. வறட்சி அதிகமாக உள்ளதால், குறைந்த பணத்தில் மக்கள் வாங்கி பயன்பெறுகிறார்கள். இதை தவறாக எடுத்து கொள்ளக் கூடாது. 

அதே நேரத்தில், இருக்கும் தண்ணீர் பஞ்சத்தில், அம்மா குடிநீரை அமைச்சர்கள் வீடுகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது. அது முற்றிலும் தவறு. அதுபோன்று யாருக்கும் தண்ணீர் செல்லவில்லை. கொடுக்கவும் இல்லை.