விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக அமமுகவில் அதிருப்தியில் இருக்கும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பிளவுக்கு டி.டி.வி.தினகரன் அணியில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர்களில் புகழேந்தியும் ஒருவர். ஓசூர் இடைத்தேர்தலில் வெறும் 1,500 ஓட்டுகள் வாங்கி படுதோல்வி அடைந்தார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு டி.டி.வி.தினகரனை புகழேந்தி விமர்சிக்கத் தொடங்கினார். கடந்த சில மாதங்களாகவே டிடிவி தினகரனை கடுமையாகவே  தாக்கி பேசிவருகிறார் புகழேந்தி. கடந்த வாரம் திடீரென சேலத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து, இடைத்தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் விரைவில் அதிமுகவில் சேரப்போவதாக புகழேந்தி அறிவித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டிடிவி.தினகரனுக்கு துணை நின்று கடுமையாக உழைத்தேன். ஆனால், மனசாட்சியே இல்லாத மனிதர் என்பது டி.டி.வி.தினகரன். நான் எப்போதும் சசிகலாவுக்கு விசுவாசமாக இருப்பேன். சசிகலா சிறையிலிருந்து வெளியே வர டி.டி.வி.தினகரன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகே அவர் அதிமுகவில் இணைவது குறித்து தெரியவரும். தமிழக முதல்வரை அணுகி விரைவில் கட்சித் தொண்டர்களுடன் அதிமுகவில் இணைய உள்ளேன். இணைப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். கர்நாடக அரசியலிலிருந்து விலகி, தமிழக அரசியலில் மட்டுமே ஈடுபட முடிவு செய்துள்ளேன். 
தினகரன் அமைப்பில் இருந்தவர்கள் பெரும்பாலும் விலகிவிட்டார்கள். இருப்பவர்கள் மன உழைச்சலுடன் உள்ளார்கள். டி.டி.வி.தினகரனின் அழிவுக்கு முக்கிய காரணமே முன்னாள் அமைச்சர் பழனியப்பன்தான். டி.டிவி.தினகரனிடம் சிலீப்பர் செல் என்ற ஒன்று கிடையாது. ஆட்சியை மிரட்டவே அதை கூறிவந்தார். நல்ல மனிதர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதனாலேயே இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது தெளிவாகிறது” என்று புகழேந்தி தெரிவித்தார்.