கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏன் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெறாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு அதிகாரத்தில் உள்ளவர்களே பொது நிறுவனங்களை புறக்கணித்தால், பிறகு பொது  நிறுவனங்களின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில் பல அரசியல்வாதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 77 வயதான கர்நாடக முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பா பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 61 வயதான சிவராஜ் சிங் சவுகான் போபாலில் உள்ள போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது. 

புதிய வைரஸ் செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்,  இந்த வைரஸ் தொற்றால் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள மெதந்தா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முன்னதாக தனக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டு அமித்ஷா,  தனக்கு  கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆனதால், தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.  தனது உடல்நிலை சீராக இருந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில் அமித்ஷாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது, இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்ட  காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அமித்ஷா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். உள்துறை அமைச்சர் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்று ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற நேரங்களில் எய்ம்ஸ் போன்ற திறமைவாய்ந்த மருத்துவமனைகள் உள்ள நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இதுபோன்ற நேரங்களில் அமித்ஷா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியமும் உள்ளது எனக் கூறியுள்ளார்.