Asianet News TamilAsianet News Tamil

‘ஊழல் மலிந்த கெஜ்ரிவால் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்’….தொண்டர்களுக்கு அமித் ஷா அழைப்பு

Amithsha Speech
amithsha speech
Author
First Published Mar 25, 2017, 10:11 PM IST


‘ஊழல் மலிந்த கெஜ்ரிவால் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்’….தொண்டர்களுக்கு அமித் ஷா அழைப்பு

டெல்லி உள்ளாட்சி தேர்தலில், ஊழல் மலிந்த கெஜ்ரிவால் அரசுக்கு தக்க பாடம் புகட்டி, 3-வது முறையாக பா.ஜனதாவை வெற்றி பெறச் செய்யும்படி, தொண்டர்களுக்கு கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்தார்.

ராம்லீலா மைதானம்

டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலையொட்டி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக் கூட்டம் ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

வெற்றி வாகை

இதில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங், ஹர்ஷ் வர்தன், விஜய் கோயல், பாஜக டெல்லி மாநில தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:-

நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களாக பாஜக வெற்றி பெற்று காவி வர்ணம் பூசப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லி மட்டும் ஆம் ஆத்மி கட்சியால் வெள்ளையாக காட்சி அளிக்கிறது.

டெல்லி அரசில் ஊழல்

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை வெற்றியடைய செய்யுமாறு தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். மற்ற கட்சிகளைப் போன்று ஆம் ஆத்மி கட்சி கிடையாது.

மிகக் குறைந்த காலத்தில் அக்கட்சியின் எண்ணற்ற ஊழல்களை செய்துள்ளனர். கட்சி தலைவரும், டெல்லி முதல் அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலரை ஊழல் குற்றச்சாட்டின்பேரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹவாலா மோசடி

வெங்காய கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. தண்ணீர் லாரிகள் வாங்கியது, தெரு விளக்குகள் அமைத்தது என அனைத்திலும் ஊழல் நடந்திருக்கிறது. ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவரே ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

வக்பு வாரியத்தில் மோசடி நடந்துள்ளது. குறிப்பாக டெல்லி அரசின் கஜானா பணம், கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பாஜகவை பொறுத்தவரையில் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய தனது கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதி விசாரணைக்கு அவர் உத்தரவிட வேண்டும்.

பாடம் புகட்டுங்கள்

டெல்லி மக்களுக்கு உதவி செய்வதாக இருந்தால் கெஜ்ரிவால் அவரது எம்எல்ஏக்களை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் போதுமானது. ஆம் ஆத்மி கட்சியின் 13 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவிருப்பது வெறும் டெல்லி உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்புதான் டெல்லி உள்ளாட்சி தேர்தல்.

எனவே கட்சித் தொண்டர்கள் ஊழல் மலிந்த கெஜ்ரிவால் அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் பாஜக வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

ெகஜ்ரிவால் கவலைப்பட வேண்டாம்

 ‘கவலை வேண்டாம், கெஜ்ரிவால்’ டெல்லி பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‘உத்தரப் பிரதேசத்தில் பாஜக அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும். அது பற்றி டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் கவலைப்பட வேண்டாம்.

தேர்தல் வந்துவிட்டால் பெரும் எண்ணிக்கையில் வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளிப்பார். தேர்தல் முடிந்து விட்டால் அவர் பஞ்சாப், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விடுவார். வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற மாட்டார்.

கெஜ்ரிவாலுக்கு வெட்கம் என்ற ஒன்று, சிறிதளவு இருந்தால், எம்எல்ஏக்கள் மீதான புகார்கள் குறித்து மக்களிடம் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அதை செய்து விட்டு, உள்ளாட்சி தேர்தலில் அவர் பிரசாரம் மேற்கொள்ளட்டும்’. இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios