மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் கழுத்து பகுதியில் கட்டியை அகற்றுவதற்கான ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது. மயக்க மருந்து கொடுத்து இந்த ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பரவியதும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அமித்ஷாவுக்கு என்ன ஆச்சி ? என ஆயிரம் கேள்விகள்.  இதற்கு கேடி மருத்துவமனையில் அறிக்கை விளக்கம் அளித்தது. அதில் கழுத்துப் பகுதியில் இருந்த கட்டி ஒன்றை அகற்றும்  லிப்போமா ஆப்ரேஷன் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

லிப்போமா என்பது தோலுக்கு அடியில், கொழுப்பு செல்களில் ஏற்படும் அபரிமிதமான வளர்ச்சி ஆகும். சிலசமயங்களில் இந்த கட்டியினால் எரிச்சல் ஏற்படலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

லிப்போமாஸ் எனப்படும் தோலின் அடிப்புறத்தில் ஏற்படும் கட்டி, பாரம்பரியமாக சில குடும்பத்தினரிடையே மட்டும் தொடர்ந்து வருகிறது. கார்ட்னர் சின்ட்ரோம், கவ்டன் சின்ட்ரோம், மடுலங்க் சின்ட்ரோம் மற்றும் அடிபோசிஸ் டோலோரோசா நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு இந்த லிப்போமா குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதிக உடற்பருமன், அதிக கொழுப்பு, நீரிழிவு, கல்லீரல் நோய்கள் மற்றும் குளுகோஸ் இன்டாலரன்ஸ் உள்ளிட்டவைகளாலும் லிப்போமா குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

லிப்போமா உடலின் எந்தபகுதியில் வேண்டுமானாலும் ஏற்படும். குறிப்பாக தோலின் அடிப்பகுதியிலேயே அதிகளவில் தோன்றும். கழுத்து, தோள்பட்டை, பின்பகுதி, வயிறு, கைகள் உள்ளிட்ட இடங்களில் லிப்போமா பாதிப்பு அதிகம் இருக்கும்.

தொடுவதற்கு மிருதுவாக அந்த கட்டிகள் இருக்கும், சிறிது அழுத்தம் தந்தாலே அதை அகற்றி விடலாம்.இரண்டு இஞ்ச் அளவை விட சிறியதாகவே இந்த கட்டிகள் இருக்கும். நரம்பு பகுதிக்கு அருகில் இந்த கட்டிகள் தோன்றிவிட்டால், ரணவேதனையை கொடுத்துவிடும் என்கின்றனர் டாக்டர்கள்.

லிப்போமா கட்டியை, ஆபரேசன் மூலமாக மட்டுமே அகற்ற முடியும். நோயாளிக்கு மயக்க மருந்து அளித்து சிறிய ஆபரேசன் மூலமாகவே இந்த கட்டிகளை அகற்றி விடலாம். ஆபரேசன் நடந்த நாளே, நோயாளியும் வீட்டிற்கு சென்றுவிடலாம் என மருத்துவர்கள் .தெரிவித்துள்ளனர்.