குடியுரிமை சட்டம் குறித்த உண்மையை பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் ஆற்றல் பாஜகவுக்கு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார் . குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது .  வடகிழக்கு மாகாணங்கள் ,  மேற்கு வங்கம் என பல்வேறு இடங்களில் போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது.  கேரளா,   மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் குடியுரிமைச் சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த முடியாது எனக்கூறி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

 

குறிப்பாக மாணவர்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் .  இச்சட்டம்  இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக  கொண்டுவரப்பட்டுள்ளது எனக்கூறி இஸ்லாமியர்கள் போராட்டத்தில்  தீவிரம் காட்டி வருகின்றனர் . அதேபோல்  இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான  பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன . இந்நிலையில்  காந்திநகர் குஜராத் காவல்துறைக்கான  பல்வேறு திட்டங்களின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது . அதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா ,  குடியுரிமைச் சட்டம் நாட்டின் மக்களுக்கு குடியுரிமை ஏற்படுத்துவதற்காகத்தானே தவிர குடியுரிமையைப் பறிப்பதற்காக அல்ல என்று கூறினார்.   மேலும் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க பிரச்சினை இல்லை என்ற காரணத்தால் தற்போது குடியுரிமைச் சட்டத்தை கையில் எடுத்து போராடி வருகின்றனர் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர்,  அரசியல் நோக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்,  இந்த பொய் பிரச்சாரத்தால் நாடு முழுவதும் குழப்பம் நிலவி வருகிறது ஆனால் பொதுமக்களுக்கு உண்மையை புரிய வைக்கும் ஆற்றல் பாஜகவுக்கு மட்மே உள்ளது ,  ஒரு தொண்டரையும்  நான்  வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான்,   ஒவ்வொரு வீடாகச் சென்று குடியுரிமை திருத்த சட்டத்தின் பயன்கள் குறித்து மக்களுக்கு  எடுத்துச்சொல்லுங்கள் .  நம் விழிப்புணர்வு பிரச்சாரம் முடியும்போது இச் சட்டத்தின்  முக்கியத்துவம் நாட்டு மக்களுக்கு  புரிந்துவிடும் என்றார்.