பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா 22, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரிசாவில் கடந்த மே மாதம்  நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை பாஜக ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா 95 நாள்கள் சுற்றுப் பயணம் செய்வார் என்றும்  அறிவிக்கப்பட்டது.  

இதையடுத்த காஷ்மீரில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அமித்ஷா, மே 10-ம் தேதி சென்னை வர திட்டமிட்டு இருந்தார். சென்னை, கோவை, மதுரை என்று அவரது பயணம் தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது திடீரென்று ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய தேதிகளில் அமித்ஷா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்தவும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித்தரவும் என்னென்ன செய்யப்பட்டுள்ளது. என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அமித்ஷாவின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம், மீண்டும் அவரது வருகை எப்போது இருக்கும் போன்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.