அமித் ஷா தமிழக சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாஜக நிர்வாகிகள் அவர் வேல் யாத்திரையில் பங்கேற்க மறுத்துவிட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வேல் யாத்திரை மூலம் பாஜகவிற்கு வாக்கு வங்கியை உருவாக்க மாநில தலைவர் எல்.முருகன் முயற்சி செய்து வருகிறார். திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக உருவகப்படுத்தவும் இந்த வேல்யாத்திரையை அவர் பயன்படுத்தி வருகிறார். ஆனால் வேல் யாத்திரைக்கு அதிமுக அரசு தடை விதித்துள்ளது.உ யர்நீதிமன்றமும் கூட வேல் யாத்திரையை அனுமதிக்க மறுத்துவிட்டது. இருந்தாலும் விடாப்பிடியாக வேல் யாத்திரையை எல்.முருகன் முன்னெடுத்துள்ளார்.

இதே போல் மாவட்டந்தோறும் பாஜக முக்கிய பிரமுகர்கள் தினந்தோறும் வேல் யாத்திரை மேற்கொள்வதும் அவர்களை போலீசார் கைது செய்து விடுவிப்பதுமாக நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதே சமயம் பாஜக தலைவர்கள் பலர் மீது ஏராளமான வழக்குகளை போலீசார் தங்கு தடையின்றி பதிந்து வருகின்றனர். இதனால் வேல் யாத்திரையில் தொடர்ந்து பங்கேற்க பாஜக நிர்வாகிகளே தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. வேல் யாத்திரையை அனுமதிக்க கோரி இரண்டு முறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் தமிழக அரசு வேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது. இந்த சூழலில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக சுற்றுப்பயணத்தை உறுதி செய்தார். இதனை அடுத்து தமிழகத்தில் வேல் யாத்திரையில் ஒரே ஒரு இடத்தில் அமித் ஷாவை பங்கேற்க வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதற்கான திட்டங்கள் உருவாகத் தொடங்கின. அண்மையில் அமித் ஷா மேற்கு வங்கம் சென்றார். தமிழகத்துடன் சேர்த்து மேற்கு வங்கத்திற்கும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் அமித் ஷா மேற்கு வங்கம் சென்று அரசியல் ரீதியிலான பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டங்கள், பேரணிகளிலும் கூட அமித் ஷா கலந்து கொண்டார். இதனால் தமிழகத்திலும் தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்படும் வேல் யாத்திரையில் அமித் ஷாவை பங்கேற்கச் செய்தால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று தமிழக பாஜக கணக்கு போட்டது. ஆனால் மேற்கு வங்கத்தில் பேரணிக்கு ஓகே சொன்ன அமித் ஷா தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு நோ சொல்லிவிட்டது.

இதற்கு காரணம் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு போட்டுள்ள தடை தான் என்கிறார்கள். அமித் ஷா பாஜகவின் அதிகாரம் பொருந்திய நபராக இருந்தாலும் அவர் தற்போது உள்துறை அமைச்சர். எனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் அவரால் பங்கேற்க முடியாது. அப்படி அவர் தடை செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்றால் அது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே தான் வேல் யாத்திரைக்கு அமித் ஷா நோ சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். இதற்கிடையே அமித் ஷா சென்னை வருவதற்குள் ஒரே ஒரு இடத்திலாவது அனுமதி பெற்று அமித் ஷாவை வேல் யாத்திரையில் பங்கேற்கச் செய்துவிட்டால் அதன் பிறகு தடைகள் இன்றி வேல் யாத்திரை மேற்கொள்ள முடியும் என்கிற திட்டத்துடன் எல்-முருகன் சில பல வியூகங்கள் வகுத்து வருவதாக கூறுகிறார்கள்.