மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானை சேர்ந்த ஓம்.பிர்லா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் புதிய அரசை அமைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டம் கூடியது. இதில், இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் பொறுப்புக்கு மேனகா காந்தி தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில், சபாநாயகர் பொறுப்புக்கு ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோடா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா, அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பிர்லாவின் மனைவி அமிதா “எங்களுக்கு இது மிகவும் பெருமை மிக்க தருணம். ஓம் பிர்லாவை தேர்வு செய்ததற்காக கேபினட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.