ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால், அதிருப்தியடைந்த அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடனான தெலுங்குதேசம் கட்சியின் கூட்டணியை முறித்துக்கொண்டார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விட்ட தூதுவையும் நாயுடு நிராகரித்துவிட்டார். பாஜகவுடனான கூட்டணியை சந்திரபாபு நாயுடு முறித்துக்கொண்டது தொடர்பான தனது கருத்தை கடிதம் மூலம் எழுதி அவருக்கு எழுதி அனுப்பியுள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா.

அந்த கடிதத்தில், பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது எதிர்பாராதது, துரதிருஷ்டமானது. அதேசமயம், தன்னிச்சையாக நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்கள். ஆந்திர மாநில மக்கள் மீதும் மாநிலத்தின் மீதும் பாஜகவிற்கு அக்கறையில்லை என நீங்கள் கூறுவதில் உண்மையில்லை. அடிப்படை ஆதாரமற்றது. உங்களின் குற்றச்சாட்டையும், முடிவையும் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

உங்களின் இந்த முடிவுகள் அனைத்தும் முழுமையாக அரசியல் நோக்கத்துக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்கப்படவில்லை.  அனைவருக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று பிரதமர் மோடி முழக்கமிட்டு வரும்போது, ஆந்திராவை தனியாக விட்டுவிடமாட்டோம். பாஜகவும், மத்திய அரசும் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளையும், திட்டங்களையும் ஏற்படுத்திக் கொடுத்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். ஆனால், இதை அரசியல் காரணங்களுக்காக நீங்கள் புறந்தள்ளிவிட்டீர்கள்.

கடந்த ஆட்சியின் போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உங்களின் கட்சிக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதபோது, பாஜக முயற்சி எடுத்து, ஆந்திர மாநில மக்களின் நன்மைக்காக உரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து தெலுங்குதேசம் கட்சி கூட்டணியிலிருந்து விலகியிருப்பது வருத்தமளிப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.