உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள திரிபுரா, மேகாலயா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் பாஜக படு பயங்கரமாக களப்பணிகளை ஆற்றிவருகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது கர்நாடகா சென்று பிரசாரம் செய்து வருகிறார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, கர்நாடகா-ஆந்திரா எல்லைப்பகுதியில் கலாபுர்க்கி மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்தார்.

விவசாயிகளுக்கான அரசு என தங்களை பிரகடனப்படுத்தி கொள்ளும் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவோ விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நிராயுதபாணியாக நின்றார்.

விவசாயியின் கேள்வி:

கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு நிதி இருக்கிறது. ஆனால், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ய உங்கள் அரசிடம் பணம் இல்லை. நாங்கள் எல்லாம் சாதாரண விவசாயிகள், சாமானிய மக்கள்தான். ஆனால் நாங்கள்தான் வாக்களித்து உங்களை ஆட்சியில் அமரவைத்தோமே தவிர தொழிலதிபர்கள் அல்ல. அது உங்களுக்கு தெரியும்தானே என நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல கேள்வி எழுப்பினார்.

அமித் ஷாவின் பதில்:

விவசாயிகளிடம் இருந்து இப்படி ஒரு சவுக்கடியை சற்றும் எதிர்பாராத அமித் ஷா சிறிது நேரம் அமைதியானார்.

அதன்பிறகு பதிலளித்த அமித் ஷா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் எந்தவிதமான கடன் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதாக ராகுல் காந்தி பொய்யான தகவல்களை கூறி வருகிறார். தொழில் அதிபர்களுக்கு உதவும் வகையில் வரிவீதங்களை மட்டுமே குறைத்து இருக்கிறோம் என அமித் ஷா தெரிவித்தார்.

நிராயுதபாணியான அமித் ஷா:

அதன்பிறகு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற கேள்விக்கு அமித் ஷா பதிலளிக்கவில்லை.

மேலும், சிவப்பு பருப்பு கொள்முதலில் தடை கொண்டு வருவது குறித்தும், இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு வரி விதிப்பது குறித்தும் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத அமித் ஷா, அங்கிருந்து சென்றுவிட்டார்.

கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தே தீரவேண்டும் என்ற பாஜகவின் கனவை தகர்க்கும் வகையில், பாஜகவின் தேசிய தலைவரையே கேள்விக் கணைகளால் திணறடித்து ஓடவிட்டுள்ளனர் கர்நாடக விவசாயிகள்.