பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அமித்ஷா, மோடி மட்டுமே மனிதர்களாகத் தெரிகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் விலங்குகளாக தென்படுகிறார்கள். அவர்களின் சொந்தக் கட்சி தலைவர்களைக் கூட மனிதர்களாக நினைப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த பாஜக நிறுவன நிகழ்ச்சியில் பேசிய அந்த கட்சியின் தலைவர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளை மிருகங்களோடு ஒப்பிட்டுப் பேசினார். 2019-ம் ஆண்டுக்கான தேர்தல் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. இதனால், நாய்கள், பூனைகள், பாம்புகள், கீரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டன. மிகப்பெரிய வெள்ளம் வரும்போது இந்த மிருகங்கள் அனைத்தும் அடித்துச்செல்லப்படும் பாஜக எனும் ஆலமரம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று அமித் ஷா பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பாஜக தலைவர் அமித் ஷா எதிர்க்கட்சித் தலைவர்களை மிருகங்களோடு ஒப்பிட்டு பேசி, மிகுந்த அவமதிப்பு செய்துவிட்டார். இதன் மூலம் தலித்துகள், பழங்குடியின மக்கள், அவர்களின் சொந்தக்கட்சியினர் கூட மனிதர்களாக மதிக்க தகுதியில்லாதவர்களாகிவிட்டனர்.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் மிருகங்கள் வரிசையில் அமித் ஷா சேர்த்துவிட்டார். ஆர்எஸ்எஸ், பாஜகவைப் பொருத்தவரை, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மட்டுமே விலங்குகள் அல்லாத பிறவிகள். மற்றவர்கள் அனைவருமே விலங்குகள் போல் சித்தரிக்கிறார்கள். அவர் பேசியிருப்பது மிகவும் தரக்குறைவான வார்த்தைகளாக இருந்தாலும், அமித் ஷாவின் பேச்சை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அமித் ஷா, அவரின் சொந்த கட்சி தலைவர்களை கூட மனிதர்களாக நினைப்பதில்லை என ராகுல் விமர்சித்துள்ளார்.