தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க செல்லாமல் கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சியில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவரின் கடமை உணர்ச்சியை பார்த்த  டாக்டர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்  பொதுமக்களின் அஞ்சலிக்காக  ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. கருணாநிதியை கடைசியாக பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் சென்றனர். மேலும் சில இடங்களில் போலீசார் வைத்திருந்த தடுப்புக்களை தகர்த்துவிட்டு பொதுமக்கள் முன்னேறி சென்றனர். அதோடு போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களை கட்டுப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே ‘தள்ளு முள்ளு’ ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி பெண் போலீஸ் அனிதா (வயது 42) உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
. இதில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் என்பவரும் ஈடுபட்டார். சரியான நேரத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் 7  பேர் உயிர்பிழைத்தனர்.

கார்த்திக் சென்னை தீவுத்திடல் அருகே உள்ள குடிசைபகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கார்த்திக் கடந்த 8-ந் தேதி அதிகாலை பணியில் இருந்தபோது சத்யாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டு கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சற்று நேரத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த தகவல் கார்த்திக்குக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவசர மருத்துவ உதவி தேவைக்காக அவருக்கு அங்கு சவாலான பணி இருந்ததால் மனைவியையும், பிறந்த குழந்தையையும் பார்க்க செல்லமுடியவில்லை.  

அப்போது  தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமத்தித்தார்.  அப்போது தீவிர சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார், உயிழந்தவரின் உடலை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு  இரவு 11 மணிக்கு தன் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனக்கு குழந்தை பிறந்த செய்தியை அறிந்தும் கூட உயிருக்கு போராடியவர்களை சமூக அக்கறையுடன்  கார்த்திக் பணியாற்றியதை அறிந்து ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் தொடர்பு அதிகாரி டாக்டர் வீ.ஆனந்தகுமார் உள்பட டாக்டர்கள், வெகுவாக பாராட்டினர்.