அதிமுக பிரமுகர் ஆட்டை திருடி கறி பிரியாணி விருந்து வைத்து அசத்திய போது கையும் களவுமாக போலீசிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விளாகம் கிராமம்.இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி.இவர் சாதாரண கூலி விவசாயி. தன் வயிற்றுபிழைப்புக்காக ஆடுகளை வளர்த்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கவிமுருகன். இவர் எதிர் வீட்டில் பிரியாணி விருந்து நடந்ததற்கு போட்டியாக தன் வீட்டிலும் கறிவிருந்து நடத்த வேண்டும் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்.அப்போது ஆட்டு கறி பிரியாணி போட வேண்டும் அதற்கு பணமும் ஆடும் வேண்டும் என்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் கண் முன் வந்து நின்றவர் பழனி. பழனி என்பவரின் இரு ஆட்டையும் ராத்திரி நேரத்தில் அவரது கொட்டகையில் இருந்து திருடி, அதில் ஒரு ஆட்டை விற்று மது மற்றும் மளிகை சாமான்கள் வாங்கியும், மற்றொரு ஆட்டை வெட்டி தனது வீட்டில் கறிவிருந்தும் நடத்தியுள்ளார்.

இந்த தகவல் பழனிக்கு தெரியவர... அவர் நேராக பெரம்பூர் காவல்நிலையத்தில் அய்யா என் ஆட்ட திருடி பிரியாணி போட்டுடானுங்கனு புகார் அளித்தார். போலீசார் வந்து கவிமுருகனையும் அவரது நண்பர்களை முறைப்படி விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவத்தை திரைக்கதைபோல் ஒப்பிக்க ஆரம்பித்து விட்டார்கள் அவர நண்பர்கள். வேறு வழியில்லாமல் கவிமுருகனும் ஆமாம் சார் நான் தான் ஆட்டை திருட சொன்னேன். பணத்தை கட்டி விடுகிறேன் என்று கதற... இன்ஸ்பெக்டர் கருணாநிதியோ அதுயெல்லாம் முடியாது உன் எம்எல்ஏ பவுன்ராஜ்க்கு போன் போடுறேன்னு சொல்லி போனை எடுத்ததும் அவரி காலில் விழுந்து கதறியிருக்கிறார் கவி. உடனே பழனியை வரச்சொல்லி இரண்டு ஆட்டுக்கான ரூ8000த்தை இன்ஸ்பெக்டர் வாங்கி கொடுத்திருக்கிறார்.

கவிமுருகன் ஊராட்சி மன்றத்தலைவராக இரண்டு முறை அந்த பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இவரோ மணல் கள்ளச்சாராயம் பண்ணைகளில் மீன் திருடுவது போன்ற சம்பவங்களில் அடிக்கடி சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது.
 பதவி இருப்பவர்களிடம் இருந்தால் அதுக்கு பெருமை..! இப்படியான ஆட்கள் கையில் சிக்கினால் கைது காப்புதான் பெருமை.!!