கொரோனா பணியில் அடிச்சுத் தூக்குகிறார்.. ஆளுநர் தமிழிசையை மனம் திறந்து பாராட்டிய காங்கிரஸ் எம்.பி..!
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆட்சியாளர்கள் செய்யாததை முனைந்து செய்கிறார். தன்னுடைய அதிகார எல்லையைத் தாண்டி செய்கிறார். அதனால் அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்று புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், இறப்பும் அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதியைப் பெற இங்கும், அங்குமாக ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் உயிர் இழப்புக்கும் பொதுமக்கள் ஆளாகின்றனர். முதல் அலையில் இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைக்குச் சென்றால் இறந்துவிடுவோம், உயிர் போனாலும் குடும்பத்தினருடையே இறக்கலாம் என்று வீட்டிலேயே சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
சுனாமியின்போது ஏற்பட்ட உயிரிழப்பைவிட தற்போது மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதி கிடைக்க, உதவி கிடைக்க எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. மக்கள் உதவி கேட்கக்கூட யாரும் இல்லை. அவர்களின் குறைகளைப் பூர்த்தி செய்ய ஆட்சியாளர்களுக்கு என்ன தடை உள்ளது? தங்களுக்கு பதவியைக் கேட்பது அவர்களது உரிமையாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கான சேவையைச் செய்வதையே மறந்துவிட்டார்கள். நாற்காலியின் மீது உள்ள வெறித்தனம், மக்களுக்கான சேவையின் மீது இல்லை.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள்தான் தமிழிசை. அவர் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருப்பதால் ஆட்சியாளர்கள் செய்யாததை முனைந்து செய்து வருகிறார். தன்னுடைய அதிகார எல்லையைத் தாண்டி செய்கிறார். அதனால் அவர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் எதையும் செய்யவில்லை. பாதிக்கப்பட்டோரைச் சந்திக்காததன் காரணத்தை அவர்கள் சொல்ல வேண்டும். ஆறுதல் சொல்வதற்குக்கூட இந்த அரசு செயல்படவில்லை” என்று வைத்திலிங்கம் விமர்சித்தார்.