ThangaTamilselvan: எப்போதும் மு.க. ஸ்டாலினுடன்தான் இருப்பேன்.. படம் போட்டு மெசேஜ் சொன்ன தங்கதமிழ்செல்வன்.!
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழியில் கழகத்திற்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பேன் என்று திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர் தங்கதமிழ்செல்வன். அவர் அதிமுகவில் இருந்தபோது தேனி மாவட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் அவருக்கும் மிகப் பெரிய போட்டி இருந்தது. தேனி மாவட்டத்தில் இருவருக்கும் இடையே உரசல், மோதலும் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணியில் தங்கதமிழ்செல்வன் இருந்தார். ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, டிடிவி தினகரன் அணிக்கு தங்கதமிழ்செல்வன் மாறினார். டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் வலது கரமாகவும் தங்கதமிழ்செல்வன் செயல்பட்டு வந்தார். அதிமுகவிலிருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது. அதில் தங்கதமிழ்செல்வன் பதவியும் காலியானது.
இதையும் படிங்க: திமுகவிற்கு குட்பாய்? மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்..?
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து டிடிவி தினகரன் கட்சியான அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டார். இத்தேர்தலில் தோல்வியடைந்தார், தங்கதமிழ்செல்வன். இதனை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அமமுகவிலிருந்து விலகி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தங்கதமிழ்செல்வன் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து போடி நாயக்கனூர் தொகுதியில் தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்பட்டார். இந்தத் தேர்தலில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
இதையும் படிங்க: சொந்த தொகுதியிலேயே எடுபடாத ஓபிஎஸ்..! எடப்பாடிக்கு எதிராக 7 நிமிடத்தில் முடிந்த போராட்டம்
இதனையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் தங்கதமிழ்செல்வனுக்கு திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் தேனியில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மதிக்கவில்லை என்றும் தங்கதமிழ்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் ஓரங்கட்டப்படும்பட்சத்தில், திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கெல்லாம் மறுப்பு தெரிவிக்கும் வகையில் தங்கதமிழ்செல்வன் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் வீட்டு வாசலில் குடுகுடுப்பைக்காரர்கள்.. இனி அவருக்கு நல்ல நேரம் தானாம்.. ஜக்கம்மாவே சொல்லிட்டாங்க.!
அந்தப் பதிவில், “நான் திமுகவில் இணைந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்தது. மூன்று வருடங்களில் என்னைக் கொள்கை பரப்புச் செயலாளராகவும், தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் நியமித்த கழக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. தொடர்ந்து கழக தலைவரின் வழியில் கழகத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பேன்.” என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலினுடன் இருக்கும் படத்தையும் தங்கதமிழ்செல்வன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.