வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று 2வது நாளாக மதுரையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பிரசாரத்தின் மத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்;- வரும் 31-ம் தேதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள். ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும். நடிகர் ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன், சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என கிண்டல் செய்தார்.

மேலும், எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் தூக்கம் வராத நிலையில் உள்ளனர்.  வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டி என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.  நகரம், பெருநகரமாக மாற கார்ப்பரேட் நிறுவனம் தேவை, சிறு, குறு தொழில், கார்ப்பரேட் சமமாக இருக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலும் கூடாது என்பது மடமை. 

லட்சியத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும். அடுத்தவர் நம்பிக்கைக்கு எதிராக கருத்துகளை கூற மாட்டேன். நான் நாத்திகன் அல்ல, பகுத்தறிவுவாதி என தெரிவித்துள்ளார்.