வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக எண்ணிக்கையில், சீட் வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க  தேமுதிக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை, கோயம்பேட்டில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 67 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால், விஜயகாந்த் உடல்நலம் பாதித்துள்ளதால் பேசவில்லை. 

அப்போது, சட்டமன்ற தேர்தல், கட்சிப்பணிகள், களப்பணிகள், கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், பிரசார ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதனையடுத்து, தேமுதிக சார்பில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், விவசாயிகள் பிரச்சனையில் தீர்வுகாண மத்திய அரசு குழு அமைக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை உடனே குறைக்க வேண்டுமென மத்திய அரசை தேமுதிக வலியுறுத்துகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜனுக்கு பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இறுதியாக நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்;- கடந்த தேர்தல்களில் நடந்த தவறை, இம்முறை செய்யமாட்டோம். இது, தேமுதிகவிற்கு நெருக்கடியான தேர்தல். இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால், கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் பறித்து விடும். எனவே, தேர்தல் கூட்டணி அமைப்பதில், கவனமுடன் இருக்கிறோம். அதிக எண்ணிக்கையில், சீட்களை வழங்கும் கட்சியுடன் தான், இம்முறை கூட்டணி அமைக்கப்படும். கடந்த காலங்களில், தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதில், சற்று தாமதம் ஏற்பட்டது; இந்த முறை அப்படி நிகழாது.

மேலும், வயது மற்றும் உடல் சோர்வு காரணமாக விஜயகாந்த் முன்புபோல இப்போது சுறுசுறுப்பாக இல்லை. எனினும் தேர்தல் பிரசார காலத்தின் ‘கிளைமாக்சில்’ விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விஜயகாந்தின் பிரசாரம் நிச்சயம் இருக்கும். எம்ஜிஆருக்கு பிறகு ஏழை மக்களின் வாழ்வு நலம்பெற பாடுபட்டு வருபவர், விஜயகாந்த். இதை மக்கள் புரிந்துகொண்டு தேர்தலில் அதை வெளிப்படுத்துவார்கள்.” என்று கூறினார்.

அத்துடன், 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது தேமுதிக. அதேபோல, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் 41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும். இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்கும் என்றார்.