அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து ஒரு மணி நேரம் கலந்து பேசி விவாதித்தால் போதும். பல பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது முதல் அதிமுகவில் அது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர்கள் அடித்து ஒட்டியும் வருகிறார்கள். மேலும் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இருவரையும் நிர்வாகிகள் மாறி மாறி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு மாஃபா பாண்டியராஜன் மற்றும் மைத்ரேயனும் வருகை தந்தனர்.

ஓபிஎஸ்ஸுடன் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் மைத்ரேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பு நல்ல முறையில்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒற்றைத் தலைமை வேண்டுமா வேண்டாமா என்பதை அதிமுக பொதுக்குழு கூடிய பிறகு முக்கிய நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஒற்றைத் தலைமையாக யார் வேண்டும் என்றால், இதை முதலில் ஆரம்பித்த ஜெயக்குமாரைத்தான் கேட்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து ஒரு மணி நேரம் கலந்து பேசி விவாதித்தால் போதும். பல பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வந்துவிடும்” என்று மைத்ரேயன் தெரிவித்தார். 

2017-ஆம் ஆண்டில் ஓ. பன்னீர்செல்வம் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார். அப்போது 12 எம்.எல்.ஏ.க்களும் 20-க்கும் மேற்பட்ட எம்.பி.களும் ஆதரவு தெரிவித்தனர். அப்போது டாக்டர் மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவருடைய அணியில் இருந்தனர். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணைய்வில்லை என்று டாக்டர் மைத்ரேயன் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.