முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்பன உட்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பபிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது  என முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றதுஇ. இதில் துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக பொதுச்செயலளார் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தேமுதிக சார்பில் சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக சார்பில் ஏகே மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. காலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர்களை தமிழக அமைச்சர்கள் வாசலில் நின்று வரவேற்றனர் 

இந்நிலையில் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உணவு இடைவேளை அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் அளிக்கப்பட்ட இந்த உணவு இடைவேளை விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார்.

ஒரு மணிநேர உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சிகள் தங்களின் ஆலோசனைகளை வழங்கின.

தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டம்  நிறைவுபெற்றது. கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட   3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.