காவிரி நதிநீர் பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதன் பின்னர், திமுக, காங்., விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவிரி மீட்பு நடை பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அண்ணாசாலை மற்றும் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காவிரி மீட்பு பயணத்தை முடித்த மு.க.ஸ்டாலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தோழமை கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அனைத்து கட்சி தலைவர்களும், சென்னை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால புரோகித்தை சந்திக்க உள்ளனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது குறித்து வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.