All party meeting by MNM kamalhassan call direct stalin
காவிரி போராட்ட ஒற்றுமைக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து நடிகர் கமலஹாசன் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த கூட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்
காவிரி போராட்ட ஒற்றுமைக்காக வரும் 19-ந்தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றை அதன் தலைவர் கமல்ஹாசன் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில், நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற கமல்ஹாசன், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி ஆகியோரும், மக்கள் நீதி மய்யம் தரப்பில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா, சி.கே.குமரவேல் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இரவு 7.45 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அதன் பிறகு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, காவிரி பிரச்சனையில் தமிழகம், தமிழ் மக்களின் நலன் என்ற ஒரு குடையின் கீழ் பல்வேறு கருத்துகள் உள்ள கட்சிகள் இணைய வேண்டும் என்பது எங்கள் ஆசை என தெரிவித்தார்.
அதற்காக நான் ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், டி.டி.வி.தினகரன், விஜயகாந்த், தமிழிசை சவுந்தரராஜன், வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பேசி இருக்கிறேன். நல்ல யோசனை, நல்ல மாண்பு. இது நடக்க வேண்டும் என்ற ஆசையில், ஒரு சிலர் பங்கெடுப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டார்கள். இந்த உரையாடல் தொடரும். தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கிறது .
இந்த கூட்டத்துக்கு ஆளும் கட்சியையும் அழைக்க இருப்பதாக தெரிவித்த கமல்ஹாசன், தமிழக நலனுக்காக இப்பிரச்சனையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தாம் விரும்புவதாகவும் கூறினார்..
