விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 வேளாண் மசோதாக்கள் மக்களவையை தொடர்ந்து  மாநிலங்களவையிலும் நிறைவேறியது.இதை கண்டித்து 28ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 3 வேளாண் மசோதாக்கள் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக பொருளாளர் வி.குமரேசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

 கூட்டத்தில் வேளாண் மசோதாக்களை எதிர்த்து வருகிற 28-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானது. வேளாண்மை முன்னேற்றத்துக்கு பின்னடைவை தரக்கூடியது. கூட்டாட்சி தத்துவத்துக்கு புறம்பானது. இந்த 3 சட்டங்களுக்கும், தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேலும், மாநிலங்களவையின் விதிகளை மீறி நிறைவேற்றியிருக்கும் இந்த சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், அவற்றை ஆதரித்திருக்கும் மாநில அ.தி.மு.க. அரசுக்கும் இந்த கூட்டம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இந்த 3 சட்டங்களை எதிர்த்து வருகிற 25-ந் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை வரவேற்கிறோம்.

சூழ்ச்சியான இந்த சட்டங்களின் வளையத்திற்குள் ஏழை விவசாயிகளை சிக்க வைத்து, அவர்களைத் தொடர்ந்து துன்பங்களுக்குள்ளாக்கி, கூட்டாட்சி தத்துவத்தை மேலும் மேலும் கேள்விக்குறியாக்கும் முயற்சி என்பதால், இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் வருகிற 28-ந் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களிலும், நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்த கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

அனைத்து விவசாய அமைப்புகளும், தொழிலாளர் அமைப்புகளும், வணிக சங்கங்களும் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய-மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியடிக்க வேண்டும்.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், துணை போன அ.தி.மு.க. அரசை கண்டித்தும் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தங்களது பகுதியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் முன்னணியினருடன் ஆலோசித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தையும், கலந்துகொள்வோர் பெயர்களையும் முறையாக அறிவித்து, கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.