எல்லா கட்சிகளையும் போல அதிமுகவிலும் உட்கட்சி பிரச்னைகள் இருப்பதாகவும் அந்த பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என்றும் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் கூறியுள்ளார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன், ஓபிஎஸ் அணியினருடன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே எடப்பாடியார் பேரவை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ ஜக்கையன் எல்லா கட்சிகளையும் போல அதிமுகவிலும் உட்கட்சி பிரச்சனைகள் இருப்பதாகவும் அந்த பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என்றார். துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு தான் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று வெளியான தகவலுக்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

மேலும் அரசு விழாக்களில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததாக எழுந்த சர்ச்சை தொடர்பாக ஜக்கையனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அப்படி ஒன்றும் இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து அரசு விழாக்களிலும் தவறாமல் கலந்துகொண்டுதான் இருக்கிறேன். ஒரே ஒரு அரசு விழாவில் மட்டும்தான் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அன்று எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது" என்றார். 

அமைச்சர் பதவியை தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் எடப்பாடியார் பேரவை என்று ஒட்டப்பட்ட போஸ்டருக்கும் தமக்கு சம்பந்தம் இல்லை என்றும் ஜக்கையன் விளக்கம் அளித்தார். அரசியல் என்று இருந்தால் அதில் உட்கட்சி பிரச்னை இருக்கத்தான் செய்யும். காலப்போக்கில் அந்த மனஸ்தாபங்கள் சரி செய்யப்படும்" என்று ஜக்கையன் தெரிவித்துள்ளார்.