கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள சசிகலா ஆதரவாளர்களான அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள்ள புறப்பட்டுவிட்டனர்.

கடந்த 5ம் தேதி ஒ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலா முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதற்கு ஒ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, இரு அணிகளாக உள்ளன.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, எம்எல்ஏக்கள், எம்பிக்கள் திரண்டு வந்தனர். அதே நேரத்தில், சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்லாமல் இருக்க, அவர்களை கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனால், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்தனர். இதைதொடர்ந்து அவருக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி பிரமாணம் முடிந்ததும் கவர்னர், எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தார். இதனால், பதவி பிரமாணம் முடிந்ததும், எம்எல்ஏக்கள் அனைவரும் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அதில், சில எம்எல்ஏக்கள் வெளியேறி, ஓ.பன்னீர்செல்வத்திடம் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி மெஜாரிட்டியை நிரூபிக்க இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடப்பு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு சம்பவஙகளுக்கு பிறகு, பரபரப்பான சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கடற்கரை சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டமன்ற வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் பஸ்கள் மூலம் சட்டமன்றத்துக்கு புறப்பட்டனர். ஆனால், திடீரென பஸ்சை ரத்து செய்துவிட்டு, எம்எல்ஏக்கள் அனைவரும், அமைச்சர்களின் கார்களில் புறப்பட்டுள்ளனர்.

முன்னதாக, எம்எல்ஏக்கள் புறப்படும்போது, அவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும், அமைச்சர்களின் கார்களில் சட்டப்பேரவைக்கு புறப்பட்டனர். அப்போது தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நிச்சயம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சி தொடரும் என்றும் தெரிவித்தனர்.