All five of us will be able to support others
ஐந்தாறு பேரை தவிர மற்றவர்களெல்லாம் எங்களுக்கே சப்போர்ட் செய்வார்கள் எனவும் சட்ட சபையின் போது ஸ்லீப்பர்செல்கள் எங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். வாழ்வா சாவா போட்டியில் அதிமுகவை வீழ்த்தி அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளார் தினகரன்.
அதிமுக அரசு, மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் பல்வேறு நெருக்கடிகளையும் மீறி அபார வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் அமைச்சர்கள் சிலரும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
ஆர்.கே.நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டியிட சசிகலா மறுப்பு தெரிவித்ததாகவும் அவரை சமாதானப்படுத்தியே தினகரன் தேர்தலில் நின்றதாகவும் தகவல்கள் உலவின. இதையடுத்து சொன்னபடியே தேர்தலில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
வரும் ஜனவரி 8ம் தேதி சட்டசபை கூடுகிறது. சட்டசபைக்கு முதல்முறையாக செல்லும் தினகரன், ஆட்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக வலுவான குரல் எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.
இதனிடையே நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பால சுப்பிரமணி பேசுகையில் தங்களுக்கு ஆதரவாக எடப்பாடி டீமில் 30 ஸ்லீப்பர்செல்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று எம்.எல்.ஏவாக பொறுப்பேற்ற டிடிவி தினகரன், ஐந்தாறு பேரை தவிர மற்றவர்களெல்லாம் எங்களுக்கே சப்போர்ட் செய்வார்கள் எனவும் சட்ட சபையின் போது ஸ்லீப்பர்செல்கள் எங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், நிர்வாகிகள் நீக்கத்தை பார்த்து மக்கள் கை கூப்பி சிரிக்கிறார்கள் எனவும் இங்க வர நினைப்பவர்களை நீங்களே அனுப்பி வைத்தால் வருங்காலம் உங்களை மன்னிக்கும் எனவும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்கள் தான் தற்போதைய ஆட்சியாளர்கள் எனவும் ஜெயித்துவிட்டேன் என ஆணவத்தில் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.
