தேனி

பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீண். அந்த சாலை திட்டம் நிறைவேறாது என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இல்ல விழாக்களில் பங்கேற்க கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் வந்திருந்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரணை செய்ய 3–வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர் 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். நான் வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். 

மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றதுதான் சரி. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த விசாரணை செய்தால் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராது. அதனால்தான் வேறு மாநிலத்திற்கு விசாரணை மாற்ற கேட்டுவுள்ளனர். 

அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சீக்கிரமாக தீர்ப்பை வழங்கினால், தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும். 17 பேர் செல்லும் பாதை சரி. அதேபோல நான் செல்லும் பாதையும் சரி.

மனுவை வாபஸ் வாங்குவதில் பொறுமை காக்க வேண்டும் என்று கூறவில்லை. அதில் 4 விதமான சிக்கல்கள் உள்ளன. இரண்டு நீதிபதிகள் அமர்வில் மனுவை வாபஸ் வாங்குவதா? அல்லது 3–வது நீதிபதியிடம் வாபஸ் வாங்குவதா? ஒருவேளை மனு வாபஸ் பெறப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிக்கப்படுமா? அப்படியே அறிவித்தாலும் உடனடியாக தேர்தல் வராது. 

பாராளுமன்ற தேர்தலோடு தான் தேர்தல் நடக்கும் என்றும் கூறுகின்றனர். தற்போதைய கோர்ட்டு உத்தரவின்படி, நான் தேர்தலில் நிற்க முடியும். ஆனால் என்னை தேர்தலில் நிற்கவிடாமல் அரசு தடுப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. 

தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் என்னுடைய வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது. அதனால் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் கொஞ்சம் அவகாசம் தேவை. இதுகுறித்து வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

தமிழகத்தில் ஆய்வு பணியில் ஈடுபடும் ஆளுநர்ரை தடுத்தால் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிப்பதாக ஆளுநர் மாளிகை அறிக்கை விடுத்துள்ளது. இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? என்று தெரியவில்லை. 

சாதாரண தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இவ்வளவு அதிகாரம் இருந்தால், இந்தியாவை ஆள்பவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? மத்தியில் இருப்பவர்களும், மாநிலத்தில் இருப்பவர்களும் மக்களை அடக்கி ஆள முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. 

இதேபோல அடக்கு முறை தொடர்ந்தால் வரும் தேர்தலில் மக்கள் இந்த அரசுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். ஆளுநர் ஆய்வு செய்யட்டும். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதேபோல பசுமை சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைகள் நடைபெற்றபோது, ஏன் மக்களை அவர் சந்திக்கவில்லை.

ஆளுநர் ஆய்வினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, மாறாக எங்கள் பணியைதான் அவர் எளிதாக்குகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆளுநர் ஆய்வு நடத்துவதால் எந்த பணி அரசுக்கு எளிதாகியுள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். தமிழக அரசு அமைச்சர் ஜெயக்குமாரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறது.

இனிவரும் காலங்களில் எல்லாம் வெளிப்படைத்தன்மையாக தான் நடக்க வேண்டும். அந்த வகையில் எங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எங்கள் துணை பொதுச்செயலாளர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியதற்கு உடனடியாக சரி என்றார். ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக இருக்கிறோம். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.

ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு கூறி அவரால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டி.டி.வி.தினகரன் செலவழிக்கிறார் என்ற பகிரங்கமாக கூறியிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது உள்ள அரசாங்கத்தின் மூலம் நீங்கள் அடிக்கும் கொள்ளை குறித்து நாங்கள் இதேபோல வெளிப்படையாக கூறினால் நன்றாக இருக்குமா? 

ஜெயலலிதாவை பற்றி இப்படி குற்றம் சாட்டி பேசியிருக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் உங்களை விரட்டி அடிப்பார்கள்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கைது செய்யும் நடவடிக்கை தவறான செயல். உரிமைக்காக போராடுவது ஜனநாயக நாட்டில் சகஜம். அதனை அரசு உரிய முறையில் கையாண்டு மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 

ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெகுண்டு எழுந்தால் தமிழக அரசால் தாங்கிக்கொள்ள முடியாது. அதுபோன்ற நிலைக்கு அரசு செல்லக்கூடாது.

பசுமை வழிச்சாலைத்திட்டத்திற்கு எதிராக எங்கள் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் போராட்டம் நடத்தப்படும். போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். 

பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீண். ஏனென்றால் அந்த சாலை திட்டம் நிறைவேறாது. மக்கள் முடிவை கேட்டு முடிவெடுக்கும்படி அறிவித்துள்ள உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பை வரவேற்கிறேன்" என்று அவர் கூறினார்.