கடந்த  2014  ஆம்  ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும்,  கருணாநிதியின் மகனுமான அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எத்தனையோ முறை அவர் மீண்டும் கட்சியில் இணைய முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரால் முடியவில்லை.

ஆனால் கருணாநிதி மறைந்த பிறகு தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் வலியுறுத்தனார். மேலும் திமுக தொண்டர்கள்  தன் பக்கம் இருக்கிறார்கள் என கொளுத்திப் போட்டார். ஆனாலும் ஸ்டாலின் அசைந்து கொடுக்கவில்லை.

அதே நேரத்தில் திமுக பொதுக்குழுவைக் கூட்டி தன்னை திமுக தலைவராக ஸ்டாலின் தன்னை முடிசூட்டிக் கொண்டார். இதையடுத்து கடந்த மாதம் 5 ஆம் தேதி திமுகவுக்கு எதிராக அழகிரி சென்னையில் பேரணி நடத்தினார். ஆனாலும் அந்த பேரணியில் அதிக கூட்டம் இல்லாததால் தோல்வியில் முடிந்தது.

இதனிடையே திருவாரூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் அழகிரி போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியது. இதற்காக அழகிரி திருவாரூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து இன்று அடுத்த கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் அழகிரி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, உழைப்பு மற்றும் சுயமரியாதையை, கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

பல சதிகளால், தான் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன் என்றும்,  தேர்தல் வரும்வரை காத்திருப்போம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், நமது உழைப்பு மற்றும் திறமையை காட்டுவோம் என சவால் விட்டார்.

 பதவி ஆசை காட்டி, தனது ஆதரவாளர்களை, ஸ்டாலின் தரப்பினர் இழுக்க முயல்வதாகவும் அழகிரி குற்றம்சாட்டினார்.