முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னாள்  தென்மண்டல செயலாளருமான மு.க. அழகிரிக்கு வேண்டுகோள் விடுத்து  அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

மதுரை திமுகவில் தற்போது நிலவும் கோஷ்டிப்பூசல் காரணமாக செல்லூர் நான்காம் பகுதி 42ஆவது வட்ட திமுகவினர் முன்னாள் அமைச்சர் அழகிரிக்கு வேண்டுகோள் விடுத்து ஒட்டியுள்ள சுவரொட்டி மதுரை திமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தச் சுவரொட்டியில், ''அண்ணே அண்ணே அழகிரி அண்ணே நம்ம கட்சி, நல்ல கட்சி மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுன்னே'' என்ற வாசகம்  குறிப்பிடப்பட்டுள்ளது.. 

இந்த சுவரொட்டிகள் மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டி உள்ளூர் திமுகவினரை அழகிரியின் ஆதரவாளர்கள் கலகலக்கச் செய்துள்ளனர்.
இந்த சுவரொட்டியில் கருணாநிதியின் படத்தோடு அவரது மகன் மு.க. அழகிரி, மதுரையின் முன்னாள் துணை மேயரும் அழகிரியின் அதி தீவிர ஆதரவாளருமான மன்னன் படமும் அச்சிடப்பட்டுள்ளது.

மதுரை திமுகவில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டத்தை எட்டி இருப்பதாகவும், அடிமட்ட தொண்டர்களை முக்கிய பிரதிநிதிகள் மதிக்காததன் காரணமாக இந்த விவகாரம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.