கயல்விழி அழகிரி!... கடந்த தி.மு.க. ஆட்சியின் இரண்டாவது செசனில் திடீரென லைம் லைட்டுக்கு வந்தவர் அழகிரியின் மூத்த மகள் கயல்விழி. சரசரவென மாடர்ன் பட்டுப்புடவையும், தலை நிறைய மல்லியும், மதுரைக்கே உரிய மஞ்சள் கலந்த கறுப்பு நிறமுமாக கழகத்தின் முக்கிய மேடைகளில் கயல் பளீச்சிட்டபோது தி.மு.க.வையும் தாண்டி பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

கயல்விழிக்கு இயல்பிலேயே தமிழ் இலக்கிய ஆர்வம் உண்டு, அதனால் கவிதை எழுதுவார். இந்நிலையில் செம்மொழி மாநாடு உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளில் அவர் பிரதானப்படுத்தப்பட்ட போது ’கனிமொழிக்கு எதிராக கயலை கொம்பு சீவி விடுகிறார்கள்.’ என்று ராஜாத்தியம்மாளிடம் சிலர் பற்ற வைத்தனர். இதை மெய்ப்பிக்கும் விதமாக கயல்விழிக்கென்று ஒரு ஆதரவுப்பட்டாளம் உருவாகியது தி.மு.க.வின் மகளிர் அணியில். கடலூர் மாநாட்டில் அசத்தலாக பேசியதால் மாநில பிரச்சாரக் குழு செயலாளர்! எனும் பதவியும் கருணாநிதியால் தரப்பட்டது இவருக்கு. 

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பின் அழகிரி அரசியல் சரிவை சந்தித்தபின் கயலும் காணாமல் போயிருந்தார். பெரிய இடைவெளிக்குப் பின் கருணாநிதியின் இறுதி யாத்திரை சம்பிரதாயங்களிலும், அழகிரி நடத்திய மெளன பேரணியிலும் அவரைக் காண முடிந்தது. 

பரபரப்பாக இருந்த காலத்திலேயே அரசியல் பேசாத கயல்விழி, இப்போது அழகிரிக்கு இக்கட்டான சூழல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தன் வாய் திறந்திருக்கிறார். அவர் பேசியிருக்கும் விஷயங்கள் ஸ்டாலின் மனைவி துர்காவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுவதுதான் ஹைலைட்டே...

“நான் இப்ப மட்டுமில்லை எப்பவுமே தி.மு.க.தான். என் அப்பா, தி.மு.க.வினுள் நுழைய முடியாமல் இருக்கிறதை நீதிக்கு கிடைச்சிருக்கிற தண்டனையாகதான் நான் பார்க்கிறேன். எந்த கட்சிக்காக தன் உயிரை பற்றி கவலைப்படாமல் உழைச்சாரோ அதே கட்சியில் அவரை இணைய வைக்க இவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது பெரிய அவலம். 

இந்த நேரத்திலும் என் சித்தப்பா ஸ்டாலின் மேலே எனக்கு வருத்தமோ, ஆதங்கமோ இல்லை. அப்பாவை கட்சியில் சேர்க்க கூடாதுன்னு சித்தப்பா நினைக்க மாட்டார், சுயநல சிந்தனையெல்லாம் அவர்கிட்ட கிடையாது. சொல்லப்போனால், அப்பாவை கட்சிக்குள் கொண்டு வந்து தி.மு.க.வை இன்னும் வலிமைப்படுத்தத்தான் அவர் விரும்புவார். 

ஆனால், அண்ணனும் தம்பியும் ஒன்றாகிவிட்டால் தங்களோட கணக்குகள் பலிக்காதேன்னு சிலர் நினைக்கிறாங்க. அவங்கதான் திட்டமிட்டு இதையெல்லாம் தடுக்கிறாங்க. சித்தப்பா ஸ்டாலினை சுற்றியிருக்கிறவங்கதான் தடைக்கல்லே. யார் அந்த தடைக்கல்லுன்னு நான் வெளிப்படையா சொல்ல வேண்டிய தேவையில்லை. கட்சியில உள்ளவங்களுக்கெல்லாம் அது யாருன்னு தெரியும்.” என்று தெறிக்க விட்டிருக்கிறார் கயல்.

சித்தப்பா ஸ்டாலின் நலல்வர்தான், ஆனால் அவர் கூட இருக்கிறவங்கதான் பிரச்னைக்கு காரணமே! அப்படின்னு கயல் சொல்லியிருப்பதை  ‘துர்கா ஸ்டாலினைதான் கயல்விழி சொல்லியிருக்கிறார். ஸ்டாலினோடு இருக்கும் கட்சி நிர்வாகிகளை இல்லை. காரணம், கட்சி நிர்வாகி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்கள் ஸ்டாலின் - அழகிரிக்கு இடையில் தடையாக இருக்கவும் முடியாது, அவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கும் கிடையாது. 

துர்காவாக இருக்கப்போய்தான் ஸ்டாலின் அவர் பேச்சை மீறாமல் அழகிரியை கட்சிக்குள் இணைக்காமல் இருக்கிறார்! அழகிரி குடும்பம் உள்ளே வந்துவிட்டால் மறுபடியும் பெரிய அதிகார மையமாக அவர்கள் வளர்ந்துவிடுவார்கள், இதனால் ஸ்டாலினின் முதல்வர் பதவியிலிருந்து பல பதவிகளுக்கு பங்கு பிரிக்க வேண்டிய சூழல் வந்து சேரும்... என துர்க்கா பயப்படுவதன் வெளிப்பாடே அவர் ஸ்டாலினை தடுக்கிறார்.” என்று விளக்க உரை கொடுக்கின்றனர் விபரமறிந்த தி.மு.க.வினர். 

ஹூம்! துர்காவை சீண்டிய கயல் கலகம் எங்கு போய் நிற்கபோகிறதோ!?