விரைவில் அயோத்தியை நவீன மயமாக்கப்பட்ட யாத்திரை மையமாக மேம்படுத்த படவுள்ளதாக அயோத்தி மேயர் தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் புனித ஸ்தலங்களில் ஒன்றான அயோத்தியில் சர்ச்சைக்குரிய  2.77 ஏக்கர் நிலம்,  தங்களுக்கே சொந்தமென இந்துக்களும் அங்குள்ள முஸ்லிம்களும் உரிமை கோரினார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில்  சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் பாபர்மசூதியை கடந்த 1992 ஆம் ஆண்டு வலதுசாரி கும்பல்களால் இடிக்கப்பட்டது.  இந்நிலையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.  கடந்த சனிக்கிழமை,  அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அதேநேரத்தில் இஸ்லாமியர்களுக்கு அயோத்தி வெறொரு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி மிகப்பெரிய புனித  யாத்திரை நகரமாக மேம்படுத்தப்படும் என அதன் மேயர்  தெரிவித்துள்ளார்.  தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய்,  பண்டைய நகரமான அயோத்தி ஒரு பெரிய யாத்திரை தலாமாக உருவாக்கப்படும், இதற்காக  அயோத்தி யாத்திரை மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டு ஆன்மீக நகரமாக மாற்றப்படும்.  அதற்காக அதிநவீன உட்கட்டமைப்புகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  என அவர் தெரிவித்தார்.  உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து உயர்மட்ட மாவட்ட மற்றும் உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் விரைவில் கூடி அயோத்தியின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் திட்டம் குறித்து வரைபடம் ஒன்றை உருவாக்க உள்ளனர் என்றார். 

மேலும் தெரிவித்த அவர் அயோத்தியில் உள்ள சாரயு ஆற்றின் கரையில் சுமார் 151 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலையை நிறுவும் திட்டம் உள்ளது ஏற்கனவே உச்சநீதிமன்றம் கோவில் கட்ட  குழு அமைக்க வேண்டும் என சொல்லி உள்ள நிலையில்,  அந்தக் குழு அதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்றார்.  அயோத்தியின் மேம்பாட்டு பணிகளை  மத்திய கலாச்சார அமைச்சகம் கண்காணிக்கும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார் .  இதுதொடர்பாக பிரதமர்  தலைமையில் விரைவில் அலோசனை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.