ஏர்செல் மேக்‍சிஸ் வழக்‍கில் மாறன் சகோதரர்கள் விடுவிக்‍கப்பட்டதை எதிர்த்து, அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கில் 4 வாரத்திற்குள் அவர்கள் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி அதன் பங்குகளை மலேசிய தொழிலதிபருக்‍கு விற்பனை செய்ததன் மூலம் மாறன் சகோதரர்களின் சன் நெட்வொர்க்‍ நிறுவனத்திற்கு மலேசியாவின் மேக்‍சிஸ் நிறுவனம் சுமார் 750 கோடி ரூபாயை முதலீடு செய்தது.

இதுதொடர்பான வழக்‍கில் மாறன் சகோதரர்களை சி.பி.ஐ நீதிமன்றம் விடுவித்தது. இததை எதிர்த்து அமலாக்‍கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி கலாநிதிமாறன் உள்ளிட்டோருக்‍கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்‍கு தீபாவளிக்‍குப் பின்னர் மீண்டும் விசாரணைக்‍கு வரும் என நீதிபதி தெரிவித்தார்.