ஒருபுறம் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சசிகலா மறுபுறம் தனக்கும் அதிமுகவுக்கும் பொது எதிரி திமுக தான் என்பதை வலியுறுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெறும் என வி.கே சசிகலா கூறியுள்ளார். கடந்த 8 மாத கால ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள், அடுத்து யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று அதிமுகவுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுகவை வழிநடத்தி வரும் ஓபிஎஸ்-இபிஎஸ் தொடர்ந்து சசிகலாவை புறக்கணித்து வரும் நிலையிலும் சசிகலா அதிமுகவுக்கு ஆதரவாக பேசியிருப்பது அதிமுக தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல வேண்டிய சூழலில் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சிறை சென்றார் சசிகலா. சிறையிலிருந்து வருவதற்குள் ஓபிஎஸ்சுடன் கைகோர்த்த எடப்பாடி சசிகலாவின் குடும்பத்தையே கூண்டோடு புறக்கணித்தார். இது சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அதிமுகவிலிருந்து புறக்கணிக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கி தனக்கான செல்வாக்கை நிரூபிக்க முயற்சித்தார். ஆனால் ஆர்.கே நகர் இடைத் தேர்தலோடி அது முடிந்து விட்டது. அதிமுக அதிருப்தியாளர்களுக்கு வடிகாலாக மட்டுமே அமமுக இருந்து வருகிறது.

இது ஒரு புறமிருக்க சிறையில் இருந்து விடுதலையானவுடன் அதிமுகவை கைப்பற்றி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அது ஈடேறவில்லை. அதிமுகவை கைப்பற்றப் போகிறேன் என்ற சசிகலாவின் கோஷம் புலிவருது கதையாகவே இருந்து வருகிறது. ஆனால் அவ்வப்போது அதிமுகவை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என சசிகலா சில முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆதரவாளர்களுடன் செல்போனில் பேசி அதனை இணையதளத்தில் வெளியிட்டு வந்தார். இதற்கு அஞ்சி சசிகலாவை இபிஎஸ் ஓபிஎஸ் அதிமுகவில் இணைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சசிகலாவின் தொடர்பில் இருந்தவர்களை கட்சியை விட்டே இபிஎஸ் ஓபிஎஸ் தூக்கி எறிந்தனர். அதனால் சசிகலாவின் அந்த வியூகம் டோட்டலாக அடிபட்டுப் போனது. அதன்பிறகும் அதிமுகவில் இணைந்து செயல்பட அவர் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அது பலனளிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அதிமுக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் விரைவில் நிலைமை மாறும் என சசிகலா அறிக்கை வெளியிட்டார். மறைந்த செல்வி ஜெயலலிதா எத்தனையோ சோதனை காலகட்டங்களிலும், அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் உறுதியோடு இருந்து வளர்த்த இயக்கம் அதிமுக. என் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அர்ப்பணித்து, அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராக நமது கழகத்தை கழகத் தொண்டர்களையும் காப்பதே நம் முதல் கடமை, கொள்கை என்பதை மனதில் கொண்டுதான் என் வாழ்க்கை பயணம் இந்த நொடியிலும் சென்று கொண்டிருக்கிறது என அதில் அவர் கூறியிருந்தார். உண்மைகளும், நியாயங்களும் என்றென்றைக்கும் தோற்றதாக சரித்திரம் இல்லை. எத்தனை இடர்கள் சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெரிந்து என் உயிர் மூச்சு உள்ளவரை அதிமுக என்ற இந்த இயக்கத்தை, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை ஓயமாட்டேன் என சூளுரைத்தார்.

ஆனால் இது எதற்கும் அசைந்து கொடுக்காத ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுதலித்ததுடன், பொதுக் குழுவைக் கூட்டி, உட்கட்சி தேர்தல் நடத்தி, அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இனி செல்வி ஜெயலலிதாவிற்கு கட்சியில் இடமே இல்லை, அவரை ஏற்றுக் கொள்வது என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என்பதை அவர்கள் ஆணித்தரமாக அடித்து கூறியுள்ளனர். இந்நிலையில்தான் அதிமுக எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. பாஜக பாமக என்ற இரண்டு கட்சிகள் அதிமுகவிலிருந்து விலகி உள்ள நிலையில் இந்த தேர்தல் அதிமுகவுக்கு சவாலானதேர்தலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அதிமுக தனது சொந்த பலத்தை நம்பி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இது திமுகவுக்கு சாதகமான தேர்தலாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான், ஒருபுறம் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சசிகலா மறுபுறம் தனக்கும் அதிமுகவுக்கும் பொது எதிரி திமுக தான் என்பதை வலியுறுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர். எதிர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மக்களின் ஆதரவுடன் அதிமுக அமோக வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். மேலும் கடந்த 8 மாத கால ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் யார் ஆட்சிக்கு வந்தால் இனி நன்றாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என அதிமுகவுக்கு ஆதரவாக பேசுயுள்ளார். மேலும், அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும், அதன் மூலம் மீண்டும் ஜெயலிதாவின் ஆட்சியை அமைக்க வேண்டும், இந்த நெருக்கடியான சூழலில் அதிமுகவில் உள்ளவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. தேர்தலுக்குப் பின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன் விரைவில் மக்களை சந்திப்பேன். விரைவில் அதிமுக தன்னிடம் வரும் என அவர் அடுத்து கூறியுள்ளார்.

அதிமுக தலைமையின் மீது சசிகலாவுக்கு பகை இருந்தாலும், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஓபிஎஸ் இபிஎஸ் புறக்கணித்து வந்தாலும், மக்கள் ஆதரவுடன் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுகவே வெல்லும் என சசிகலா பேசியிருப்பது அதிமுக தொண்டர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுக தொண்டர்களின் மனதை கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
