வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 23ஆம் தேதி முதல்  மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுடன் கலந்துரையாடினார். அந்த வகையில் ராணிப்பேட்டை தொகுதி மாவட்டம் அனந்தலை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டார். அப்போது பொதுமக்கள் தங்களின் தேவைகளையும், குறைகளையும் அவரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, அதிமுகவை நிராகரிக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றி, அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பலகையிலும் மக்கள்  கையெழுத்திட்டனர்.

அப்போது ஸ்டாலின் பேசுகையில் “அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யாரென்று எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் போரே நடந்தது. அதனால் கூடி உட்கார்ந்து பேசி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்கள். கடந்த இரண்டு நாட்களாக வேறொரு செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக, மோடி, நட்டாதான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர்களே கூறி வருகிறார்கள்.

ஆக, எப்போது பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து கழற போகிறார் எனத் தெரியவில்லை. எப்போது அதிமுக இரண்டாக

உடையப்போகிறது என்பதும்  தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அதிமுக உடையப்போகிறது. முதல்வர் வேட்பாளரை அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் முதல்வரையே மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.