முதல்வர் வேட்பாளர் யார் என்கிற போட்டி கடுமையாக ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் எடப்பாடி.பழனிச்சாமியுடனான  மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இந்த உச்சகட்ட மோதல் துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றிருப்பதாக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசியல் களத்தில் அனலை கக்க ஆரம்பித்துள்ளது.

 இதனிடையே  2வது நாளாக ஓபிஎஸ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஆதர வாளர்கள் வீட்டின் முன்பு குவிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் ஆயுத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் உருவாகியுள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ்சில் யார் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் ஒரு தரப்பினர் இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இன்னொரு தரப்பு ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி இருதரப்பினருக்கும் இடையே உள்ள மோதலை நடுரோட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்த கடந்த 18ம் தேதி உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். இதற்கு உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார்.

11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்’’ என்றார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகமும், இது என்ன ஜாதி கூட்டமா? ஒரு ஜாதிக்கு மட்டும் முதல்வர் பதவியா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். இதனால் முதல்வர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. இதற்கிடையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்று பாஜ தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு கட்சியின் தலைமை கழகத்தில் நேற்று முன்தினம் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 283 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றியவுடன், திடீரென அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, ‘‘முதல்வர் வேட்பாளர் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அவர் ஆரம்பித்து வைத்ததை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், காமராஜ், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, செம்மலை ஆகியோர் வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.கூட்டத்தில் பேசிய அனைவருமே சொல்லி வைத்ததுபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அனைவருமே பேசினர்.


அதோடு தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோருடன் ஆலோசனையை காலை 10.30 மணிக்குத் தொடங்கினார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை எப்படி சமாளிப்பது, முதல்வர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்காமல் தடுப்பது? கட்சியின் பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அறிவிக்க வைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதோடு, தங்களது முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி கேட்காமல் செயல்பட்டால், பாஜ மேலிடத்துடன் ஆலோசனை நடத்தி, பலப்பரீட்சையை நடத்துவது என்று முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரும் ராமநாதபுரம் எம்எல்ஏவுமான மணிகண்டன் திடீரென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்வதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த திட்டத்தை அவர் ரத்து செய்து விட்டார். வீட்டில் இருந்தபடியே தனது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு பேசியபடியே இருந்தார். மாலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் சில எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் சந்திப்பதாக கதவல்கள் வெளியானதும் கிரீன்வேஸ் சாலையில் வீட்டு முன்பு கூட்டம் கூடியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதேநேரத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேச துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அனுமதி கிடைத்ததும் டெல்லி செல்ல பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளாராம். அப்போது நட்டாவையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டத்தை புறக்கணித்து விட்டு தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவது அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லத் தொடங்கியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோட்டையில் ஆலோசனைக் கூட்டத்தை முடித்தது விட்டு மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த நத்தம் விஸ்வநாதன் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் வேலுமணியும் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், நிர்வாகிகள் ஆதரவுடன் அக்.7 முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்க கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தென் மண்டலத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் பதவி சண்டையில் சாதி அரசியல் தலை தூக்கி உள்ளது. இதனால், வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதை தடுக்க ஓபிஎஸ் புதிய யுக்தியை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் வகித்து வரும் துணை முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.