அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி, பன்னீர்செல்வம் இடையேயான முட்டல், மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ‘அதிமுக  தொடக்க விழாவான  அக்டோபர் 17-ம் தேதி அன்று அதிமுக தலைமைக்கழகத்தில்,  நான்தான் கொடியேற்றுவேன் என்றும்,  கட்சி 100 சதவிகிதம் கட்சி தனது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் ஓ.பி.எஸ் புது நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்தஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலும்  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முதல்வரும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது வீடுகளில் தனித்தனியாக , ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். முதல்வர் பதவிக்கு இருவரும் மோதி வருவதால், அதிமுக மீண்டும் உடையும் நிலை உருவாகி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் இருவருக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக நேரடி மோதல் தொடர்ந்த நிலையில், 7 ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்தது.

ஆனால், தற்போது வரை இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில்,  இபிஎஸ், ஓபிஎஸ் இல்லங்களில் இன்று 2வது நாளாக ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. நேற்று மூத்த அமைச்சர்கள் பலரை எடப்பாடி சந்தித்த நிலையில், ஒபிஎஸ் ஆதரவாளர்களையும் சந்தித்து பேசினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இருந்தாலும், இன்று மீண்டும் 2வது நாளாக ஆலோசனைகள் தொடர்ந்து வருகிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை மாற்றி மாற்றி சந்தித்து வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இன்று காலை முன்னாள் அமைச்சர் வளர்மதி உடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அரசு கொறடா ராஜேந்திரன் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையனும், உடுமலை ராதாகிருஷ்ணனும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.

அதுபோல ஓபிஎஸ் இல்லத்தில்,  அதிமுக துணைஒருங்கிணைப்பாளர்கள் கேபி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, எடப்பாடி ஆதரவாளர்களாக கருதப்படும்  மூத்த அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது, அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவை அமைப்பது தொடர்பாக ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களிடம் மேலும் சில நிபந்தனைகளை விதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக என்ன எடப்பாடியாரின் சொத்தா..? கட்சியும் வேண்டும், ஆட்சியும் வேண்டும் என்றால் மொத்தத்தையும் தூக்கி அவரிடம் எப்படி கொடுக்க முடியும்..? அதிமுக முழுமையாக தனது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்றும்,  இந்த மாதம் 17-ம் தேதி  நடைபெற உள்ள அதிமுகட்சி தொடக்க விழா அன்று அதிமுக தலைமைக்கழகத்தில், நான்தான் கொடியேற்றுவேன் என்றும் திட்டவட்டமாக கூறியிருப்பதாகவும், இதை ஏற்றுக்கொண்டால், முதல்வர் பதவிக்கான வேட்பாளர் தேர்வில் இருந்து தான் விலகிக்கொள்வதாக தெரிவித்து உள்ளதாகவும்  கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எடப்பாடி மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினரும் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருவதால், நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பது, அந்த குழுவிற்கு எத்தகைய அதிகாரம் வழங்குவது என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நடைபெறும் முக்கிய நிர்வாகிகளின் சந்திப்பு, அதிரடி ஆலோசனை கூட்டங்கள், அமைச்சர்களின் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் அ.தி.மு.கவை உற்று நோக்க வைத்துள்ளது.