விரைவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவடைய உள்ள நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை அல்லது மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார் மைத்ரேயன்.

அதிமுக வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு பெற்றவர் மைத்ரேயன். பாஜகவிலிருந்து வந்திருந்தாலும், இவர் மீது கொண்ட நம்பிக்கையால் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார். தற்போது மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மைத்ரேயனின் பதவி, ஜூலை மாதத்தோடு நிறைவடைய உள்ளது. நான்காவது முறையாக மைத்ரேயனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று அவரும் காத்திருக்கிறார்.

 

ஆனால், கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கும் என்று தெரியாததால், தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிட மைத்ரேயன் ஆர்வம் காட்டிவருகிறார். இதற்காக தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் சீட்டு கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இதில் குறிப்பாக தென் சென்னை தொகுதியை மைத்ரேயன் எதிர்பார்ப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். தென் சென்னை சொந்த தொகுதி என்பதாலும், இந்தத் தொகுதியில் எல்லா இடங்களும் அவருக்கு அத்துபடி என்பதாலும் இந்தத் தொகுதி மீது மைத்ரேயன் கண் வைத்திருக்கிறார். 

ஆனால், இந்தத் தொகுதியில் கடந்த முறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை தென் சென்னை அல்லது வட சென்னையில் போட்டியிட அவர் விரும்புவதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் பாஜகவும் தென் சென்னை தொகுதியைத் தங்களுக்குக் கேட்டிருக்கிறது. மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். 

 

இதனால், மைத்ரேயனுக்கு மக்களவை  தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால், மைத்ரேயனுக்கு சீட்டு கிடைக்க ஓபிஎஸ் உதவுவார் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். அதிமுக பிளவுக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக மாறிய மைத்ரேயன், அணிகளுக்கு இணைப்புக்கு பிறகு ‘அணிகள் இணைந்தன, மணங்கள்..’ என்று கேள்விகேட்டு அதிமுகவை அதிர செய்தார். இதேபோல நாடாளுமன்றத் தேர்தல் பணிக்குழு எதிலும் மைத்ரேயன் சேர்க்கப்படாமல் போனதால், தனது மன வருத்தத்தை அண்மையில் மைத்ரேயன் வெளிப்படுத்தினார்.