கர்நாடக பா.ஜ.க-வை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னால் சி.டி.ரவி ஏற்றுக்கொள்வாரா... தி.மு.க-வை தனியாக எதிர்த்து எந்த தேர்தலிலும் வெற்றிபெறாத நீங்கள், 30 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த எங்களுக்கு அறிவுரை சொல்வதா

பாஜக கட்டுப்பாட்டுக்குள் அதிமுக இருந்து வருகிறது என்ற விமர்சனத்தை எடப்பாடி பழனிசாமி தவிடு பொடியாக்கியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர், கடந்த முறை ஈரோடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கே இந்த முறையும் ஆளும் திமுக ஒதுக்கியது. திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் போட்டியிடுவதாக அறிவித்தனர். ஆனால், இடைத்தேர்தல் பாஜக போட்டியிடுகிறதா? அல்லது பாஜக யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததுடன், நாராயணன் திருப்பதி எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அதுபற்றி கவலை இல்லை என்று பேசியது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியடைய செய்தது. 

இதனால், கடுப்பான எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவின் போது வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் சுயேச்சை சின்னத்தில் போட்டிடுவோம் என இபிஎஸ் உறுதியாக இருந்து வந்தனர். அன்று மாலையே ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளராக களமிறக்கப்பட்டனர். ஆனால் ஓபிஎஸ் தரப்போ, பாஜக போட்டியிட விரும்பினால் எங்கள் வேட்பாளரைத் திரும்ப பெற்றுக்கொள்வோம் என்று அறிவித்திருந்தனர். தொடர்ந்து மவுனம் காத்து வந்த பாஜக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வௌியானது. 

இது ஒருபுறமிருக்க ஈரோட்டில் நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பேனர் வைக்கப்பட்டிருந்தது. பேனரில் பாஜகவின் பெயரோ, பிரதமர் மோடி உட்பட எந்த ஒரு பாஜக தலைவரின் படமும் இடம்பெறவில்லை. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஜெகன்மூர்த்தி படங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக என்ற கேள்வி எழுந்தது. மேலும், பாஜகவை தைரியமாக எடப்பாடி பழனிசாமி எதிர்க்க தொடங்கவிட்டார் என்று பேசப்பட்டது. இதுதொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய போது பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். 

இந்நிலையில், டெல்லி சென்று வந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலை திடீரென எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உடனிருந்தார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாஜக நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால், இருவரையும் சமசரம் செய்யும் முயற்சியில் ஈடுபடுதாக தகவல் வெளியானது. 

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 1972-ல் எம்.ஜி.ஆர் அதிமுக-வை உருவாக்கியபோது திமுக-வை தீயசக்தி என அழைத்தார் என்றும், திமுக-வை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் சிடி ரவி கூறியிருந்தார். இதற்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளருமான சிங்கை ஜி.ராமச்சந்திரன் சி.டி.ரவியை கடுமையாகச் சாடியிருந்தார். 

 சிங்கை ஜி.ராமச்சந்திரன் வௌியிட்ட டுவிட்டர் பதிவில்;- `எங்கள் கட்சியில் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல சி.டி.ரவி யார்... ஒரு தேசியக் கட்சியிலிருந்து வருவதால் நீங்கள் எதையும் ஆணையிட முடியுமென்று அர்த்தமா... கர்நாடக பா.ஜ.க-வை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னால் சி.டி.ரவி ஏற்றுக்கொள்வாரா... தி.மு.க-வை தனியாக எதிர்த்து எந்த தேர்தலிலும் வெற்றிபெறாத நீங்கள், 30 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த எங்களுக்கு அறிவுரை சொல்வதா... தீயசக்தி என்றால் என்ன, 1972-ல் எம்.ஜி.ஆர் ஏன் காட்சியைத் தொடங்கினார் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்கிறீர்களா... உங்களின் எல்லை எதுவென்று தெரிந்துகொள்ளுங்கள்" என்று சிங்கை ஜி ராமச்சந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார். 

அதேபோல், பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம். பாஜக வட நாட்டில் எப்படிப்பட்ட செயல்களை எல்லாம் செய்தது? பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன? இந்த ஆட்சிகளை எல்லாம் பாஜக எப்படி எல்லாம் பிடித்தது? உங்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். ஆகையால், நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் என பொன்னையன் தெரிவித்திருந்தார். இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்தடுத்து பாஜக எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். 

பொன்னையன் பேசியது தொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய போது இரண்டாம் கட்ட தலைவர்கள், மூன்றாம் கட்ட தலைவர்கள் பேசுவது வருத்தம் தருகிறது. தமிழ்நாட்டில் பிறரது பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளர வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய சக்தியை பயன்படுத்தி நாங்கள் வளர்ச்சியடைவோம். எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். எங்கள் வேண்டுகோளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என அண்ணாமலை கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பாஜக கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மூலம் அதை எடப்பாடி பழனிசாமி தவிடுபொடியாக்கியுள்ளார்.