டெல்லி அரசியலில் லாபி செய்ய மக்களவை தேர்தலில் அதிமுக விஐபிகள் தங்களது வாரிசுகளை களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர். மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்கும் பகீர் திட்டத்தையும் கையிலெடுத்துள்ளனர். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரகுமார் எம்பி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கி உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் பெயரிலும் விருப்ப மனு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழில்துறை அமைச்சரும் கடலூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.சி.சம்பத்  தனது மகனுக்கும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது அண்ணனுக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் மீண்டும் சென்னையில் எம்பி தேர்தலில் போட்டியிடவும் விருப்ப மனு பெற்றுள்ளனர். 

ஆக இந்த முறை  அதிமுகவில் வாரிசுகளை களமிறக்க விஐபிகள் தயாராகி விட்டனர். இதனால், அவர்கள் சார்ந்த தொகுதிகள் இவர்களுக்குதான் என்று குத்தகை விட்டதுபோல அந்த தொகுதிகளில் ஏற்கெனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். தமிழக அரசியல் லாபிக்கு ஒருங்கிணைப்பாளரும், துணை  ஒருங்கிணைப்பாளரும் இருப்பார்கள். டெல்லியில் லாபி செய்ய தங்கள் வாரிசுகளை களம் இறக்கிவிட முடிவு செய்துள்ளனர். 

இந்த முறை கூட்டணி அமைச்சரவைதான் மத்தியில் அமையும் என்ற நிலை உருவாகி உள்ளதால் தங்களது வாரிசுகளுக்கு மத்தியில் இணை அமைச்சர் பதவிகளை வாங்கிவிடலாம் என்கிற மனக்கணக்கில் அவர்கள் இருக்கிறார்களாம். இதனால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஆர்.கே.நகரை போல பல மடங்கு கரன்சி மழை பொழிவது உறுதி என்கிறார்கள் உடன்பிறப்புகள்.