அதிமுக அணிகள் இணைப்பு என்பது உட்கட்சி பிரச்சனை, இதில் பாஜகவுக்கு எந்தவித பங்கும் இல்லை என்றும், திருநாவுக்கரசர் போன்றோர் தவறாக திசை திருப்புகின்றனர் என்றும் தமிழிசை சௌந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கூறியிருந்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்திரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பாஜகவை பலப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம் என்றார். 

பாஜக தலைவர் அமித்ஷா தமிழகம் வருவதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார். ஆனாலும், அமித்ஷா தமிழகம் வருகையினால், தமிழகத்தில் சில அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். இது நேர்மறை மாற்றமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதிமுக இணைப்பு குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக அணிகள் இணைப்பு என்பது உட்கட்சி பிரச்சனை. இதில் பாஜகவுக்கு எந்தவித பங்கும் இல்லை. இதனை திருநாவுக்கரசர் போன்றோர் தவறாக திசை திருப்புகின்றனர் என்றும் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.