அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற பாடுபடுவோம் என்று அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதினார்.  
இதற்கிடையே அதிமுக ஐ.டி. விங்கும், அதிமுகவுக்காக மறைமுகமாகத் தேர்தல் பணியாற்றும் சுனில் டீமும் இணைந்து முதல்வர் எடப்பாடியை முன்னிறுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட உடனே, ‘ நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ என்ற ஸ்லோகனுடன் கூடிய புரமோஷனை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். 
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், இனி அவரைப் பற்றிய புரமோஷன்களை தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட சுனில் டீமும் அதிமுக ஐ.டி. விங்கும் முடிவு செய்துள்ளன. அதிமுக முழு வீச்சில் செயல்படும்வண்ணம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.