தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் குடிநீருக்காக தெருத் தெருவாக அலைகின்றனர். அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய தமிழக அரசு, கடவுள் கோபம் என கூறி, அமைச்சர்கள் தலைமையில் பல்வேறு கோயில்களில் யாகம் வளர்க்கிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியோ, தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதுபோல் செய்வதை விட, கலந்து பேசி ஒரு வழிபன்னுங்கப்பா என பொதுமக்கள் கூறுகின்றனர்.

கத்திரி வெயில் முடிந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், இன்னும் வெயில் குறைந்தபாடில்லை. அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் வெளியே தலைக்காட்ட முடியாமல், வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அதே நேரத்தில், வீட்டில் புழுக்கம் தாங்காமல் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, அவதியடைந்து வருகின்றனர்.

 

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 75 சதவீத ஏரிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அதனை அகற்ற அதிகாரிகள் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இதுவரை முடிந்தபாடில்லை. இதனால், தண்ணீர் இல்லாமல் மீதமுள்ள ஏரியின் பகுதிகள், வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டு மழை காலத்துக்கு முன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வாரி சீரமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் டெண்டர் விடப்பட்டு, வேலைகளும் நடந்தன. ஆனால், மழை பெய்யாமலேயே மதகுகள் உடைந்துவிட்டன. இதனால், மழை வரும்போது, தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொதுமக்களின் தண்ணீர் பிரச்சனையில், அரசு மெத்தனம் காட்டுவதாக கூறி, சட்டமன்ற எதிர்க்கட்சியான திமுக, அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்பட்டு, தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், எதிர்க்கட்சி சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக, மழை வேண்டி, கோயில்களில், சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள்  நடத்தி, அன்னதானம் வழங்கும்படி, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி, ஈரோடு மாவட்டம் பச்சைமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் செங்கோட்டையன் மழை வேண்டி இன்று காலை சிறப்பு யாகம் நடத்தினார். திருச்சி, ஸ்ரீரங்கம் உறையூரில் நடக்கும் யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும், கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்றனர். 

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் யாகம் மற்றும் போராட்டத்தால் தண்ணீர் பிரச்சனை யை தீர்க்க முடியாது. இதற்கு ஒரே வழி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, ஆலோசனை செய்து, தண்ணீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.