மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்கிறது அதிமுக. ஆனால், உள்ளாட்சித் தேர்தலை கண்டு அக்கட்சி அஞ்சுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை ஒடுக்குவதற்காக எல்லையைப் பாதுகாப்பது போல தடுப்புகள் அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற எம்பிக்கள், அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க விடாமல் தடுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதெல்லாம் மத்திய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்.


பேரறிவாளன் உள்பட 7 பேருடைய விடுதலையை மத்திய அரசு பந்தாடுகிறது. இது மத்திய அரசின் நயவஞ்சகம். இந்த விஷயத்தில் மாநில அரசு உடனடியாக தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்கிறது அதிமுக. ஆனால், உள்ளாட்சித் தேர்தலை கண்டு அக்கட்சி அஞ்சுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது அதனால்தானே. இயற்கை சீற்றம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு நடத்தியும் மத்திய குழு வந்தும் நிவாரணம் கிடைத்தபாடில்லை.