தமிழகத்தில் 6 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்படும் என கோவையில் நடந்த தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்க பேசினார்.

 கோவை மாநகரில் பல்வேறு இடங்களில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்பாக கேலிச்சித்திரம் அடங்கிய போஸ்டர் அ.தி.மு.க.வினரால் ஒட்டப்பட்டது. இதை கிழித்தெறிந்த திமுகவினர் 12 பேர் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கோவை மாவட்ட தி.மு.க. சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதிஸ்டாலின்...

 


"ஆளும்கட்சியினர், போஸ்டர் ஒட்டும்போது அரசியல் நாகரீகத்தை பின்பற்ற வேண்டும். உங்களுக்கு மட்டும்தான் போஸ்டர் அடித்து ஒட்டத்தெரியுமா? உங்களைவிட மோசமாக போஸ்டர் ஒட்ட எங்களுக்கும் தெரியும். போஸ்டர் அச்சிடும்போது, அச்சிட்டவர் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். அந்த பெயரை குறிப்பிட்டு அச்சடிக்க உங்களுக்கு தைரியமில்லை. தமிழக அரசு துறைகளில், குறிப்பாக உள்ளாட்சி துறையில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு 3 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில், கொரோனாவைவிட மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிளீச்சிங் பவுடர், மாஸ்க், கையுறை போன்ற அனைத்து உபகரணங்கள் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது.

இன்னும் 6 மாதத்தில் இந்த ஆட்சிக்கு மக்கள் சாவு மணி அடிப்பார்கள். கோவையில் தி.மு.க. நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை போலீசார் உடனே வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால், குனியமுத்தூர் காவல் நிலையம் உள்பட வழக்குப்பதிவு செய்த அனைத்து காவல் நிலையங்களையும் முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்துவோம்"என்றார். காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, உதயநிதி ஸ்டாலின், கார்த்திக் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 9 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.