தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியனின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அவரது முகநூல் பக்கத்தில்;- தூத்துக்குடியில், காவலர் சுப்பிரமணியன் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணியில் உயிரிழந்த காவலருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து - அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க, பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பினைத் தமிழகக் காவல்துறை உறுதிசெய்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.