Asianet News TamilAsianet News Tamil

அதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.!

கொரோனா வந்தது உண்மை- அது தானாகவே குறைவது உண்மை. தானாக குறைவதைத் தடியெடுத்து விரட்டுவது போல் பொய் சொல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

AIADMK regime goes home is Farmers Day...mk stalin slams edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Oct 29, 2020, 1:59 PM IST

கொரோனா வந்தது உண்மை- அது தானாகவே குறைவது உண்மை. தானாக குறைவதைத் தடியெடுத்து விரட்டுவது போல் பொய் சொல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் - (மறைந்த) தலைமைச் செயற்குழு உறுப்பினரும் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளருமான மு.காந்தி அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.  பின்னர் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்;- ஒரத்தநாடு மு.காந்தி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இருந்தாலும், அவர் ஆற்றிய பணிகள் இப்போதும் - ஏன், எப்போதும் நம் கண் முன் வந்து நிழலாடிக் கொண்டிருக்கும். ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலாளராக மட்டுமின்றி - தஞ்சை தெற்கு மாவட்டத் தி.மு.க.வின் போர் வீரராகத் திகழ்ந்தவர் அவர். இந்த இயக்கத்தில் உழைத்த ஒருவர்- பல முக்கியப் பதவிகளுக்கு வர முடியும் என்பதற்கு  உதாரணமாக விளங்கியவர் காந்தி அவர்கள். 1996-ல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். 1998-ல் ஒன்றியக் கழக துணைச் செயலாளர். 2001-ல் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர். 2006-ல் ஒரத்தநாடு ஒன்றியப் பெருந்தலைவர். ஒருங்கிணைந்த ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர். 2014-ல் இருந்து தனது மறைவு வரை- அவர் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலாளர்.

AIADMK regime goes home is Farmers Day...mk stalin slams edappadi palanisamy

 இந்த இயக்கம் - திராவிடப் பேரியக்கம் அப்படிப்பட்டது. தன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட கள வீரர்களைக் கை தூக்கி விட்டு அழகு பார்த்த இயக்கம். இன்றைக்கும் கட்சிக்காக தியாகம் செய்தவர்களை முன்னிறுத்தும் இயக்கம். அதனால்தான் கட்சியின் இன்பத்திலும்- துன்பத்திலும் வளர்ந்த மூத்த கழகத்தினருக்கு “பொற்கிழி” வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.  அதேபோல், திடீரென்று மறைவெய்தும் கழகக் காளையர்களுக்கு அஞ்சலி செலுத்தி - இந்தக் கொரோனா காலத்திலும் காணொலி வாயிலாகப் படத்திறப்பு விழா நடத்தி வருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு தொண்டனையும் மதிக்கும் இயக்கம் இந்த இயக்கம் என்பதை நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன். அப்படித்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இந்தப் பேரியக்கத்தை வளர்த்திருக்கிறார்கள்.

 இன்றைக்கு நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி  தமிழகத்தின் சாபக்கேடாக இருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை - மத்திய பா.ஜ.க. அரசுக்கு கும்பிடு போட்டு ஆதரவு தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி. விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைய வைக்கும் நெல்லுக்கு அ.தி.மு.க. அரசு கொடுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையே போதாது. அந்தக் குறைந்த பட்ச விலைக்கும் மூன்று வேளாண் சட்டங்களில் உத்தரவாதம் இல்லை.  பஞ்சாப் மாநிலத்தில் குறைந்த பட்ச ஆதார விலைக்குக் கீழ் நெல் வாங்க தடை போட்டு சட்டம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு சிறைத தண்டனை என்று கூறுகிறது அந்தச் சட்டம். பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு உள்ள தைரியம் பழனிசாமிக்கு இல்லை. அப்படியொரு சட்டத்தை தமிழகச் சட்டமன்றத்திலும் கொண்டு வாருங்கள் என்று தி.மு.க. வலியுறுத்தியது.

AIADMK regime goes home is Farmers Day...mk stalin slams edappadi palanisamy

 நானே முதலமைச்சர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் இன்றுவரை அதற்கு பழனிச்சாமி தயாராக இல்லை. கொஞ்சம் கூட மனச்சாட்சியே இன்றி  வேளாண் சட்டங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டு இன்றைக்கு மாட்டு வண்டி ஓட்டி – விவசாயிகளை ஏமாற்றுகிறார். குறைந்த பட்ச ஆதார விலை மட்டுமல்ல - விவசாயிகளின் நெல்லைக் கூட கொள்முதல் செய்யப் பழனிசாமிக்கு மனமில்லை. போதிய நேரடிக் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தவில்லை. ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் கொள்முதல் செய்யுங்கள் என்று நான் விடுத்த வேண்டுகோளை இதுவரை ஏற்கவில்லை.1000 மூட்டை நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என்று கைவிரிக்கிறார். அதைக் கொள்முதல் செய்யக் கூட கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மூட்டைக்கு இவ்வளவு கொடுத்தால்தான் நெல்லை கொள்முதல் செய்வோம் என்று சொல்லி விவசாயிகளைக் கதிகலங்க வைக்கிறார்கள். இதனால் உயர்நீதிமன்றமே, “விவசாயிகளிடம் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம்” என்று கண்டனம் செய்தது. அப்போதும் கூட இந்த எடப்பாடி அரசு திருந்தவில்லை. 

AIADMK regime goes home is Farmers Day...mk stalin slams edappadi palanisamy

விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகித் தவிக்கிறார்கள். கொரோனா பேரிடரும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது.  அந்த உத்தரவை எதிர்த்து – உச்சநீதிமன்றத்திற்கு சென்று- விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றவர் இதே பழனிசாமி. விவசாயிகளுக்கு மன்னிக்க முடியாத துரோகங்களை அடுக்கடுக்காகச் செய்து விட்டு இன்று மாட்டு வண்டியில்  ஏறி - நின்று போலி விவசாயி வேடம் போட்டு நடித்து மக்களை ஏமாற்றுகிறார். விவசாயிகள் மேல் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள் பார்ப்போம்.

AIADMK regime goes home is Farmers Day...mk stalin slams edappadi palanisamy

 நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்காத வேளாண் சட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சொல்லுங்கள். அதைச் செய்துவிட்டு, இப்படி மாட்டு வண்டியில் ஏறி விவசாயி என்று சொல்லுங்கள். அதை விடுத்து - ஆட்சிக்காலம் முழுவதும் விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டு, காவிரி டெல்டாவில் தூர் வாருவதிலும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து விட்டு நானும் விவசாயி நானும் விவசாயி என்று தயவு செய்து போலி வேடம் போடாதீர்கள். உழைக்கும் வர்க்கமாகன இந்த நாட்டின் முதுகெலும்புகளாக இருக்கும் விவசாயிகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனையில் முதலமைச்சர் பழனிசாமி ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். அரசு நடவடிக்கை எடுத்ததால் கொரோனா குறைந்து விட்டது என்கிறார்.  10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிற்குப் பலியாகியிருப்பது பழனிசாமியின் மோசமான நிர்வாகத்தால் என்பதை மறந்து விட்டு இப்படிப் பொய் சொல்கிறார். கொரோனா வந்தது உண்மை- அது தானாகவே குறைவது உண்மை. தானாக குறைவதைத் தடியெடுத்து விரட்டுவது போல் பொய் சொல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

AIADMK regime goes home is Farmers Day...mk stalin slams edappadi palanisamy

  கொரோனாவால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். கூலித்தொழிலாளர்கள் கஷ்டப்பட்டார்கள். சிறு வியாபாரிகள் திண்டாடினார்கள். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்றுவரை இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. பெரிய தொழிற்சாலைகளே இன்றைக்கு சகஜ நிலைமைக்கு இன்னும் வர இயலவில்லை. வேலை இழந்தவர்களுக்கு இன்னும் மீண்டும் வேலை கிடைக்கவில்லை. கொரோனா காலத்திலும் சொத்து வரி செலுத்துவதற்கு அபராதம் போட்டவர் பழனிசாமி. கொரோனா காலத்திலும் மின் கட்டணத்தை ஈவு இரக்கமில்லாமல் வசூலித்து - அதைக் குறைக்க முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டவர் பழனிசாமி. கொரோனாவால் மக்களுக்கு நஷ்டம்.  ஆனால், பழனிசாமிக்கு லாபம்; மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லாபம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு லாபம். முகக்கவசம் கொள்முதலில் ஊழல். பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் ஊழல். அதிவிரைவு கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்குவதில் ஊழல். விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று நடத்தும் கொரோனா விளம்பரங்களில் ஊழல். கொரோனாவிற்காக பணியாளர் நியமனம் என்று- அதிலும் ஊழல்.

AIADMK regime goes home is Farmers Day...mk stalin slams edappadi palanisamy

 இப்படி, முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கொரோனா ஊழலில் கொள்ளை லாபம். மக்கள் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்று பழனிசாமியால் மறுக்க முடியுமா? நாளைக்கே கொரோனா கொள்முதல் குறித்த அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடும் துணிச்சல் பழனிச்சாமிக்கு உள்ளதா? அதனால்தான் சொல்கிறேன், எடப்பாடி ஆட்சி தமிழகத்திற்குத் துரோகம் செய்த ஆட்சி. தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி. இந்த ஆட்சி – விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள். அந்த நன்னாளை உருவாக்கிட திராவிட முன்னேற்றக் கழகம் போர்ப் பரணி பாடும். அந்தப் போரில் தமிழக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, இருட்டில் தவிக்கும் தமிழகத்தின் விடியலுக்கான கழகத்தின் ஆட்சியை - பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை - முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியை அமைப்போம் என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios