அதிவேகமாக வந்த கார்.. நிறுத்த சொன்ன அதிமுக எம்.பி. தர்மரின் மருமகனுக்கு அரிவாள் வெட்டு..!
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான தர்மரின் மருமகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான தர்மரின் மருமகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கோகுலகண்ணன். இவர், அதிமுக மாநிலங்களவை எம்.பி. ஓபிஎஸ்சின் தீவிர விசுவாசியுமான தர்மரின் சகோதரியின் மகன் ஆவார். சொந்த ஊரான புளியங்குடியில் தர்மர் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று அந்த வீட்டின் அருகே ஒரு கார் அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த எம்.பி. தர்மர் அவர்கள் யார் என கோகுலகண்ணனிடம் விசாரிக்கும் படி கூறியுள்ளார்.
இதனால் கோகுலகண்ணன் காரை மறைத்து விசாரித்த போது காரில் வந்த கும்பல் கோகுலகண்ணனை அரிவாளால் வெட்டிய போது கையால் தடுத்துள்ளார். அப்போது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். இதனையடுத்து, உடனே அவரை அப்பகுதியினர் மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கோகுலகண்ணனின் அண்ணன் ராமமூர்த்தி என்பவர் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.