2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று திமுக மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசாரமான விவாதம் நடைபெற்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பெரும் போராட்டங்களுக்கு இடையே அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் பிரச்சனை தீரவில்லை. பிரச்சனை இனிதான் தொடங்க போகிறது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். எடப்பாடி குழுவினரும், ஓ.பன்னீர்செல்வம் குழுவினரும் தேர்தலில் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே வேலை பார்க்க தொடங்குவார்கள் என்று  தங்க.தமிழ்செல்வன் கூறியுள்ளார்.