பாமக நிறுவனர் ராமதாஸை கடந்த 25 வருடங்களாக கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும் தற்போது அவர் அதிமுக அமைச்சர்களுடன் நடத்தியது இடஒதுக்கீட்டுக்கான பேச்சுவார்த்தை அல்ல தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தான் என்று.

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடந்த நவம்பர் மாதம் முதலே பாமக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. போராட்டத்தின் முதல் நாளில் ராமதாசே எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவு கிடைத்தது. வெறும் ஆர்பாட்டம் என்று அறிவித்து சென்னை மாநகரையே சுமார் 4 மணி நேரம் முடக்கிப்போட்டனர் பாமகவினர். ஆனால் அதன் பிறகு அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பேசிய பிறகு போராட்டம் நீர்த்துப்போனது. ஆனாலும் கூட விடாமல் விஏஓக்களிடம் மனு கொடுப்பது, ஆங்காங்கே ஆர்பாட்டம் என வன்னியர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த போராட்டங்களை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. மற்ற கட்சிகளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் மவுனம் காப்பதைத்தான் அதிமுக விரும்பவில்லை என்கிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி தொடர்பாக தெளிவான முடிவை எடுக்குமாறு கடந்த 15 நாட்களுக்கு முன்னரே அதிமுக தரப்பில் இருந்து பாமக தரப்பிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதிமுக கூட்டணியில் அதிமுகவிற்கு பிறகு பெரிய கட்சி பாமக தான். எனவே முதலில் பாமகவிற்கான தொகுதி ஒதுக்கீட்டை இறுதி செய்ய விரும்புவதாக அதிமுக பாமகவிடம் தெளிவாக எடுத்துரைத்துவிட்டது.

ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணி என்று தடலாடியாக அறிவித்துள்ளார் ராமதாஸ். இதற்கு காரணம் கடந்த முறை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்றோர் ராமதாசை சந்தித்து பேசிய போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் வெளியே கசிந்தது தான் என்கிறார்கள். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு என்பதையும் தாண்டி அதிமுக கூட்டணியில் பாமகவிற்கான தொகுதிகள் குறித்தும் அமைச்சர்கள் – ராமதாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கம் போல் 60 தொகுதிகள் தங்களுக்கு தேவை என்று ராமதாஸ் பேச்சை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தை 55 தொகுதிகள் என்பது வரை ராமதாஸ் இறங்கி வரும் வரை நீடித்ததாகவும் அதன் பிறகு அமைச்சர்கள் முதலமைச்சர் – துணை முதலமைச்சரிடம் பேசிவிட்டு கூறுவதாக தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள். அமைச்சர்கள் சென்ற அடுத்த நிமிடமே அதிமுக கூட்டணியில் பாமக 60 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகின. இது ராமதாசை டென்சன் ஆக்கிவிட்டதாக கூறுகிறார்கள். அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை அதற்குள் எப்படி வெளியானது என்றே அவர் இடஒதுக்கீடு தொடர்பாக மட்டுமே பேசியதாகவும் தேர்தல் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் தடலாடியாக அறிவித்ததாக கூறுகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 41 தொகுதிகள் வரை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தயராக இருப்பதாக கூறுகிறார்கள். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை 51 வரை கூட உயர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியை ராமதாஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக  அறிவிக்க வேண்டும் என்று அதிமுக எதிர்பார்க்கிறது. ஆனால் திரைமறைவு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் கூட்டணி தொடர்பாக பாமக எந்த இறுதி முடிவையும் அறிவிக்காது என்று ராமதாஸ் தரப்பில் உறுதியாக உள்ளனர்.

இதனால் தான் பாமக – அதிமுக பேச்சுவார்த்தை தொடர்ந்து கிணற்றில் போட்ட கல்லாக எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறியாக இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு வன்னியர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்களுடன் பேசும் ராமதாஸ், செய்தியாளர்கள் யாரையும் அழைக்காதது ஏன்? பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதில் விவாதிக்கப்பட்ட அம்சங்களை செய்தியாளர்களை சந்தித்து விளக்காதது ஏன்? என்று கேள்விகள் எழுந்து வருகின்றன.